ராஞ்சியில் நடைபெற்ற இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்தில் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடையே நடைபெற்ற கடும் மோதலில் பலருக்கும் காயம் ஏற்பட்டது.
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்து, 'உல்குலன் நியாய யாத்திரை' என்ற பெயரில், மாபெரும் பொதுக்கூட்டத்துக்கு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஏற்பாடு செய்திருந்தது.
ராஞ்சியில் நடைபெற்ற இந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங், பஞ்சாப் முதல்வர் பகவந்த்சிங் மான், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், பீஹார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், ஜார்க்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா உட்பட இந்தியா கூட்டணியின் முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர்.
ஹேமந்த் சோரன் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மேடையில் இருக்கை போடப்பட்டு, அதில் அவர்களின் பெயர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன், கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்று பேசினர்.
கூட்டத்தின் போது, ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் நாற்காலிகளை தூக்கி வீசி, அடிதடியில் இறங்கியதால் பதற்றம் நிலவியது. ஜார்கண்டின் சத்ரா மக்களவை தொகுதியின் வேட்பாளராக கட்சியின் மூத்த தலைவரான கே.என். திரிபாதியை காங்கிரஸ் நிறுத்தியுள்ளது. இதற்கு இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள ராஷ்ட்ரீய ஜனதா தளம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நேற்று நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ்-ராஷ்ட்ரீய ஜனதா தளம் தொண்டர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஒரு கட்டத்தில் இந்த வாக்குவாதம் முற்றி மோதலாக வெடித்தது. இருதரப்பினரும் நாற்காலிகளை தூக்கி எறிந்து ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த மோதலில் சிலர் காயம் அடைந்தனர். இரண்டு கட்சிகளையும் சேர்ந்த மூத்த தலைவர்கள் அங்கு வந்து தொண்டர்கள் சமாதானப்படுத்தி வன்முறையை முடிவுக்கு கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் இந்த மோதல் குறித்த படங்களை வெளியிட்டுள்ள பாஜக, ‘வன ராஜ்ஜியம்’ என்று விமர்சித்துள்ளது.