அனைத்து வீட்டு மின் இணைப்புகளுக்கும் 100 யூனிட் இலவச மின்சார பயன் தொடர வேண்டும்: இபிஎஸ் வலியுறுத்தல்


சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: அதிமுக ஆட்சியில், வீட்டு உபயோகிப்பாளர்கள் அனைவருக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. இதனால், ஒரு வீட்டில் 2 இணைப்புகள் இருந்தால், அந்த வீட்டின் உரிமையாளரும், வீட்டில் வாடகைக்கு உள்ளவர்களும், 100 யூனிட் இலவச மின்சாரத்தைப் பெற்று வந்தனர்.

தற்போது, திமுக அரசின் மின்வாரியம் வீட்டின் உரிமையாளர் பெயரில் ஒரு மின் இணைப்பு மட்டுமே அனுமதிக்க உள்ளதாகவும், அதற்கான ஆய்வுப் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. வாடகைக்கு இருப்பவர் அந்த வீட்டை காலி செய்துவிட்டால் உடனடியாக வீட்டு உரிமையாளரின் பெயரில் உள்ள 2 மின் இணைப்புகளில் ஒரு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, ஒரு மின் இணைப்பு மட்டுமே வழங்கப்படும்.

புதிய வாடகைதாரருக்கு மீண்டும் புது மின் இணைப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு மீண்டும் வைப்புத் தொகை, முன்பணம் போன்ற மின்சாரக் கட்டணங்களை செலுத்த வேண்டும். இதற்கான கட்டணம் ரூ.60 ஆக இருந்தது. திமுக ஆட்சியில் அது பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஏழை, எளிய வாடகைதாரர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலின்போது அளித்த வாக்குறுதிப்படி, ஜெயலலிதா முதல்வராக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் முதல் கையெழுத்திட்ட 100 யூனிட் இலவச மின்சாரத்தை, உரிமையாளர்கள் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகள் இருக்கும்பட்சத்தில், வாடகைதாரர்களுக்கும் தொடர்ந்து வழங்க வேண்டும்.

வாடகைதாரர்கள் வீட்டை காலி செய்தால், மின் இணைப்பை துண்டிக்கக் கூடாது. அதிமுக ஆட்சியில் இருந்த நிலைமையே தொடர வேண்டும். மின் இணைப்பு துண்டிப்பை சம்பந்தப்பட்ட மின் நுகர்வோர்களுக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னதாகவே தெரிவித்து, அவர்கள் மின் கட்டணத்தைச் செலுத்த அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

லேப்டாப் திட்டம் வருமா?- இதனிடையே பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டதாவது: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் நோக்கில், ஜெயலலிதா அரசால் தொடர்ந்து சிறப்புற வழங்கப்பட்டு வந்த லேப்டாப்கள், திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் நிறுத்தப்பட்டுள்ளன. இன்னும் சில நாட்களில் புதிய கல்வியாண்டு தொடங்கும் நிலையில், இந்த ஆண்டுக்கான லேப்டாப்களை வழங்குவது குறித்து எந்த விதமான அறிவிப்பையும் திமுக அரசு வெளியிடாமல் இருப்பது கண்டனத்துக்குரியது.

முதல்வர் ஸ்டாலின் அவர்களே, இந்த ஆண்டாவது லேப்டாப் திட்டத்தை அரசு நிறைவேற்றுமா அல்லது, ஜெயலலிதா அரசால் கொண்டுவரப்பட்ட திட்டம் என்ற காழ்ப்பில் ஏதேனும் தேவையற்ற காரணம் சொல்லப்போகிறீர்களா?

இவ்வாறு கூறியுள்ளார்.

x