ஒரே தேர்வு மையத்தில் அதிக தேர்ச்சி...எஸ்.ஐ தேர்வு குறித்து விசாரணை கேட்கும் அண்ணாமலை!


அண்ணாமலை

காவல் துறை உதவி ஆய்வாளர் தேர்வு முறைகேடு குறித்து விசாரித்து, தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " தமிழகத்தில் காலியாக உள்ள 621 உதவி ஆய்வாளர் பணியிடங்களில் 123 பணியிடங்கள் துறையில் பணிபுரிகிறவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. அதற்கான எழுத்து தேர்வு ஆகஸ்ட் 26 மற்றும் 27-ம் தேதிகளில் நடைபெற்றது.

காவல்துறையில் பணியாற்றும் 7000 பேர் அந்த தேர்வு எழுதி முடிவுகளுக்கு காத்திருந்தனர். தற்போது வெளியாகி உள்ள அந்த முடிவுகள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. அடுத்தடுத்த தேர்வு எண் உள்ளவர்கள் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்திருப்பதாக தேர்வு எழுதியவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எழுத்துத் தேர்வு

ஒரே தேர்வு மையத்தில் அதிக தேர்ச்சி பெறும் வழக்கமான அரசு தேர்வு முடிவுகள், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் காவல்துறை எழுத்து தேர்வு முடிவுகளிலும் வந்திருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.

உடனடியாக இந்த முறைகேடு குறித்து விசாரித்து தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தகுதியுடைய காவல்துறை சகோதரர்கள் மட்டுமே உதவி ஆய்வாளர் பணியில் நியமிக்கப்பட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

x