தஞ்சாவூரில் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த போதும் வாக்கு செலுத்துவதற்காக அவசர ஊர்த்தியில் வந்த மூத்த வாக்காளருக்கு வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்திருந்தது.
மக்களவைத் தேர்தல் காலை 7 மணிக்கு துவங்கி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பல இடங்களிலும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். தேர்தல் ஆணையம் சார்பில் மூத்த குடிமக்கள் மற்றும் பெண்கள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று வெப்பம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், ஏராளமான பொதுமக்கள் வெயில் துவங்குவதற்கு முன்பே வாக்களித்துவிட்டு செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் தஞ்சாவூர் முன்னாள் மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் ஆம்ப்ரோஸ் உடல் நலம் பாதிக்கப்பட்டு தஞ்சை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இருந்த போதும் இன்று தனது ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காக மருத்துவமனையில் இருந்து அவசர வாகன ஊர்தி மூலம் யாகப்பா நகரில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு வருகை தந்தார். ஸ்ட்ரெச்சரில் அழைத்து வரப்பட்ட அவரை, வாக்குச்சாவடி மையத்தில் இருந்த முதியோர் இருக்கை மூலம் பணியாளர்கள் மற்றும் அவரது உதவியாளர்கள் வாக்குச்சாவடி மையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் தனது வாக்கினை செலுத்தினார்.
உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதும், ஜனநாயக கடமையை செய்வதற்காக வருகை தந்த மூத்த வாக்காளருக்கு சக வாக்காளர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதனிடையே சமீபத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கோவை ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ், ஆலாந்துறையில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் இன்று தனது வாக்கினை செலுத்தினார்.