வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு... தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு தாமதம்!


மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்

ராமேஸ்வரம், கோவையில் மின்னணு வாக்கு இயந்திரம் கோளாறு காரணமாக சுமார் 45 நிமிடம் வாக்குப்பதிவு தாமதமாகி வருகிறது.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக இன்று நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் ராமேஸ்வரம் தீவு பகுதி முழுவதும் 40 இடங்களில் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு காலை 7:00 மணி முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில் ராமேஸ்வரம் அடுத்த வேர்க்கோடு பகுதியில் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் 313 வாக்கு பதிவு மையத்தில் மின்னணு வாக்கு இயந்திரம் கோளாறு காரணமாக 45 நிமிடம் வாக்குப்பதிவு தாமதம் ஏற்பட்டது.

முதல் முறை வாக்காளர்கள்

இதனை அடுத்து மின்னணு வாக்கு இயந்திரத்தை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதால் வாக்காளர் நீண்ட வரிசையில் வாக்களிப்பதற்காக காத்திருக்கின்றனர். இந்த நிலையில் அதிகாரிகள் மின்னணு வாக்கு இயந்திரத்தை சரி செய்ததை அடுத்து 45 நிமிடம் பின்னர் வாக்காளர்கள் வாக்களித்தனர்.

இதே போல் கோவை கணபதி மாநகராட்சி பள்ளியில் 285 எண் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு ஏற்பட்டதால் வாக்குப்பதிவு சுமார் 50 நிமிடம் வாக்குப்பதிவு தாமதமாக துவங்கியது. இதனால் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர். மேலும் மேட்டூர் பூத் எண் 59ல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அரை மணி நேரமும், ஈச்சனாரி வாணி வித்யாலயா பள்ளி பூத் 181ல் ஒரு மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு துவங்கியது.

x