திட்டமிட்டபடி ஜாக்டோ-ஜியோ சார்பில் இன்று நடைபெற உள்ள கோட்டை முற்றுகைப் போராட்டத்தில் ஐம்பதாயிரம் பேர் கலந்து கொள்ள உள்ளனர் என்று அதன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், இடைநிலை ஆசிரியா்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குதல் போன்ற 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இன்று சென்னையில் கோட்டை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை வெற்றிகரமாக நடத்த திட்டமிட ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நேற்று மாலை சென்னை திருவல்லிக்கேணி அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநில ஒருங்கிணைப்பாளர்கள் வெங்கடேசன், காந்தி ராஜன், காமராஜ் ஆகியோர், “ஜாக்டோ - ஜியோ அமைப்பினரின் கோட்டை முற்றுகை போராட்டம் திட்டமிட்டபடி, சிவானந்தா சாலையில் இன்று நடைபெறும் என்று தெரிவித்தனர்.
"இதில், 50,000 பேர் கலந்து கொள்வார்கள். முந்தைய அரசு, தங்களின் கோரிக்கைகள் குறித்து அழைத்துக்கூட பேசவில்லை. ஆனால், இந்த அரசு எங்களை அழைத்துப் பேசுகிறது; இதுதான் வித்தியாசம்.
30 மாதமாக நாங்கள் ஏமாற்றப்பட்டு உள்ளோம். இனி மென்மையான போக்கை ஜாக்டோ - ஜியோ கடைபிடிக்காது. முதலமைச்சர் மௌனத்தை கலைந்து எங்கள் கோரிக்கைகள் குறித்த நிலையை அறிவிக்க வேண்டும். இனிமேல் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு குழு அமைப்பதை ஏற்க மாட்டோம். அதேபோல், தொடர்ந்து காலம் கடத்தும் செயலையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு குறிப்பிட்ட காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும். 2026-ம் ஆண்டு வரை இப்படியே நீட்டிக்கலாம் என்றால், நாங்கள் ஏமாறமாட்டோம்" என்று அவர்கள் தெரிவித்தனர்.