விஜயகாந்த் உடலை பொது இடத்தில் அடக்கம் செய்ய அனுமதி கிடைக்காததால் தேமுதிக தலைமை அலுவலகத்தில் அடக்கம் செய்ய ஏற்பாடு!


தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் நாளை மாலை 4.35 மணிக்கு சென்னை கோயம்பேடில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த், டிசம்பர் 11ம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதனையடுத்து நடந்த தேமுதிக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றார் விஜயகாந்த். அப்போது அவரது உடல்நிலையை பார்த்து தொண்டர்கள் கண்ணீர் விட்டனர்.

இந்நிலையில் தான் செவ்வாய்கிழமை இரவு மீண்டும் விஜயகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், இன்று காலை விஜயகாந்துக்கு நுரையீரலில் ஒவ்வாமை ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், மருத்துவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் சிகிச்சை பலனின்றி இன்று காலை விஜயகாந்தின் உயிர் பிரிந்தது.

இதனையடுத்து அவரது உடல் மருத்துவமனையில் இருந்து சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட கேப்டன் உடல் சென்னை தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள், தொண்டர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

நேரில் அஞ்சலி செலுத்திய முதல்வரிடம் கேப்டனின் உடலை பொது இடத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டுமென குடும்பத்தார் கோரிக்கை வைத்தனர். ஆனால், ராஜாஜி ஹாலில் விஜயகாந்த் உடலை பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்க மட்டும் அனுமதி கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், அதனை விஜயகாந்த் குடும்பத்தார் நிராகரித்துவிட்டனர். இதையடுத்து, நாளை மாலை 4.35 மணிக்கு சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

தமிழகமே கண்ணீரில் மூழ்கியது... நடிகர் விஜயகாந்த் திடீர் மரணம்... கதறும் தொண்டர்கள்!

விஜயகாந்த உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

x