குப்பை அகற்றும் புதிய நடைமுறையால் குளறுபடி: வீதிகளில் வீசிச்செல்லும் குடியிருப்புவாசிகள் @ கோவை


கோவை விளாங்குறிச்சி சாலையில் வினோபாஜி நகர் அருகே சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பைகள். படம் : இல. ராஜகோபால்

கோவை: கோவை மாநகரில் வீதிகளில் இருந்த குப்பை தொட்டிகள் அகற்றப்பட்டதால், சாலையோரங்களில் குப்பையை வீசிச்செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.

மக்கும் குப்பை, மக்காத குப்பை என வீடுகளில் தரம் பிரித்து பெறும் வகையில் புதிய நடைமுறையை கடந்த சில மாதங்களுக்கு முன் கோவை மாநகராட்சி நிர்வாகம் அறிமுகப்படுத்தியது. வீதிகளில் வைக்கப்பட்டிருந்த குப்பை தொட்டிகள் அகற்றப்பட்டு வீடுகளுக்கு வரும் தூய்மை பணியாளர்களிடம் குப்பையை வழங்க அறிவுறுத்தப்பட்டது.

ஆனால் பல இடங்களில் சாலையோரங்களில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. குப்பை தொட்டிகள் வைக்கப்பட்ட பகுதிகள் மட்டுமின்றி புதிதாக பல இடங்களில் சாலையோரம் திறந்தவெளி பகுதிகளில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் மாநகராட்சி பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. குப்பைகளை பெற்று அகற்றும் பணியை சீரான முறையில் மேற்கொள்ளவும், குப்பை தொட்டிகளை வைக்கவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பின் செயலாளர் லோகு கூறும் போது, “குப்பைகளை சரியான முறையில் தூய்மை பணியாளர்கள் பெற்று அகற்றுவதில்லை. சில நாட்கள் குப்பை பெறும் வாகனங்கள் வருவதே இல்லை. குப்பை தொட்டிகளை அகற்றிவிட்டு, குப்பைகளை வந்து பெற்று செல்லாமல் இருந்தால் மக்கள் என்ன செய்வார்கள். இதன் காரணமாகவே சிலர் சாலையோரங்களில் குப்பைகளை கொட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் என்ற நடைமுறையை யாரும் எதிர்க்கவில்லை. குப்பைகளை பெற்று அகற்றும் பணியை பணியாளர்கள் சீரான முறையில் மேற்கொள்ள வேண்டும். பல இடங்களில் குப்பைகளை அகற்ற பணம் கேட்கின்றனர். இதுபோன்ற கள பிரச்சினைகளை ஆராய்ந்து சிறந்த முறையில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

x