மாண்டியாவில் ஐஸ் கிரீம் சாப்பிட்டு உயிரிழந்த ஒன்றரை வயதுடைய இரட்டைக் குழந்தைகள் வழக்கில் திடீர் திருப்பமாக பெற்ற தாயே குழந்தைகளுக்கு ஐஸ்க்ரீமில் விஷம் கலந்து கொடுத்துள்ளது தெரிய வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டம், ஸ்ரீரங்கப்பட்டணம் தாலுகாவில் உள்ள பெட்டஹள்ளி கிராமத்தில் நேற்று மாலை ஐஸ்கிரீம் சாப்பிட்டு இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையில் குழந்தைகளுக்கு தாயே விஷம் கொடுத்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. குடும்ப தகராறு காரணமாக தன்னுடைய மூன்று குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து, தாயும் விஷம் அருந்தியுள்ளார்.
மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணம் தாலுக்கா பெட்டஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த தம்பதியர் பூஜா, பிரசன்னா. இவர்களுக்கு பிருந்தா எனும் மகளும், ஒன்றரை வயதில் இரட்டை மகள்கள் என 3 மகள்கள் இருந்தனர்.
நேற்று மாலை ஐஸ்கிரீம் சாப்பிட்டு இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், போலீஸாரின் விசாரணையில், மூன்று குழந்தைகளுக்கும் தாய் பூஜா விஷம் கொடுத்தது தெரியவந்தது.
தனது கணவர் பிரசன்னாவுடன் அடிக்கடி தகராறு தொடர்ந்து வந்த நிலையில், நேற்று இரட்டையர்களான திரிஷூல், த்ரிஷா மற்றும் மூத்த மகள் பிருந்தா ஆகியோருக்கு வீட்டில் இருந்த கரப்பான் பூச்சி மருந்தை கொடுத்து விட்டு, பூஜாவும் அதை சாப்பிட்டுள்ளார். பின்னர் பூஜாவும் அவரது 3 மகள்களும் மாண்டியா மிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இரட்டைக் குழந்தைகளான திரிஷூல், த்ரிஷா இறந்தனர். பூஜாவும், மூத்த மகள் பிருந்தாவும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.