கோவையில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்து கொண்டிருந்த பாஜக பிரமுகரான அரசுப் பேருந்து ஓட்டுநரிடமிருந்து 81 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் தமிழ்நாடு முழுவதும் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து கோவையில் தங்கி இருக்கும் நபர்களை வெளியேறுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியிருந்தது. இதனை கண்காணிக்கும் வகையில் தங்கும் விடுதிகளுக்கு போலீஸார் சென்று தீவிர ஆய்வில் ஈடுபட்டனர்.
அதேபோல் பல்வேறு இடங்களிலும் பணப்பட்டுவாடா நடைபெறுவதாக வந்த புகார்களின் பேரில் தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக தொண்டாமுத்தூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பாஜகவினர் வாக்காளர் பட்டியலை வைத்து பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்தது. இதன் பேரில் தேர்தல் பறக்கும் படை குழுவினர் அவ்வழியாக வந்த சொகுசு கார் ஒன்றை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
அதில் பாஜக ஆலாந்துறை மண்டல் தலைவரான ஜோதிமணி (37) என்பவர் பயணித்துக் கொண்டிருந்தார். அவர் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். அவரது காரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 81 ஆயிரம் ரூபாய் பணம் இருந்தது தெரிய வந்தது. மேலும் சிறு சிறு தொகைகளாக பணத்தை பிரித்து வைத்திருந்ததும், அவரது வாகனத்தில் வாக்காளர் பட்டியலையும் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து பணம், வாக்காளர் பட்டியல் மற்றும் பாஜக துண்டு பிரசுரங்களை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், பணத்தை பேரூர் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இது சம்பந்தமாக தொண்டாமுத்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.