புதுச்சேரியில் இன்று முதல் 144 தடை உத்தரவு... தேர்தல் ஆணையம் அதிரடி!


மக்களவைத் தேர்தலை அமைதியாக நடத்தி முடித்திட ஏதுவாக புதுச்சேரி மாநிலத்தில் இன்று முதல் ஏப்.20-ம் தேதி காலை வரையிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் 18 வது மக்களவைத் தேர்தலில் முதற்கட்ட வாக்கு நாளை மறுதினம் நடைபெறுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட மொத்தம் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இன்று மாலை ஆறு மணியுடன் பிரச்சாரம் ஓய்வடைகிறது. வாக்குப் பதிவு அமைதியான முறையில் நடத்திட தேர்தல் ஆணையம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் வாக்குப்பதிவு முடியும் வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான குலோத்துங்கன் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். "புதுச்சேரி எம்.பி. தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிமுதல் மாலை 6 மணிவரை நடக்கிறது. வேட்பாளர்களின் பிரச்சாரம் இன்று (புதன்கிழமை) மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது.

ஓட்டுக்காக பணம், பரிசுப்பொருள் கொடுப்பதை தடுக்க 72 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப் பதிவுக்கான பணியில் 6 ஆயிரத்து 428 அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். மேலும் 211 நுண்பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப்பதிவையொட்டி, இன்று (புதன்கிழமை) மாலை 6 மணி முதல் 20-ந் தேதி காலை 6 மணிவரை புதுச்சேரி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு வாக்களிக்க வருபவர்களுக்கு பொருந்தாது. தியேட்டர்களில் நாளை (ஏப்.19) இரவு காட்சியும், நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை முழுநேரமும் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படுகிறது" என்று அவர் தெரிவித்தார்.

x