திமுக கூட்டணி 34 தொகுதிகளில் வெற்றி பெறும் : ஆனால்... பிரபல தொலைக்காட்சி பரபரப்பு கருத்துக்கணிப்பு!


திமுக தலைவர் ஸ்டாலின்

தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் திமுக 34 தொகுதிகளை எளிதாக வெல்லும் எனவும், ஐந்து தொகுதிகளில் இழுபறி நீடிக்கிறது எனவும் தனியார் தொலைக்காட்சி நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்பது குறித்து பிரபல தமிழ் தொலைக்காட்சியான தந்தி தொலைக்காட்சி கருத்துக்கணிப்பு நடத்தியது. மார்ச் 20 முதல் ஏப்ரல் 14-ம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இந்தக் கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகள் நேற்று இரவு வெளியாகி உள்ளன.

அதன்படி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் திமுக கூட்டணி 34 இடங்களில் வெல்லும். இதில் திமுக கூட்டணி 29 தொகுதிகளில் எளிதாக வெற்றி பெறும் எனவும், 5 தொகுதிகளில் கடும் போட்டிக்குப் பிறகு வெற்றி பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஈரோடு, திருச்சி, தேனி, ராமநாதபுரம், தென்சென்னை ஆகிய ஐந்து தொகுதிகளில் கடும் போட்டிக்கு பின்னர் திமுக குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

பாஜக

வேலூர், கோவை, திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி, பொள்ளாச்சி ஆகிய ஐந்து தொகுதிகளில் யாருக்கு வெற்றி என்று கூற முடியாத அளவுக்கு கடும் இழுபறி நிலவுவதாக கூறப்பட்டுள்ளது. இதில் வேலூரில் திமுக மற்றும் பாஜக இடையேயும், திருநெல்வேலியில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையேயும், கோவையில் திமுக மற்றும் பாஜக இடையேயும், கள்ளக்குறிச்சியில் அதிமுக மற்றும் திமுக இடையேயும், பொள்ளாச்சியில் திமுக மற்றும் அதிமுகவுக்கு இடையே கடும் போட்டி நிலவலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

இதில் கொஞ்சம் முயற்சி செய்தால் கள்ளக்குறிச்சி மற்றும் பொள்ளாச்சியில் அதிமுக வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பாஜக வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி 41 முதல் 47 சதவீத ஓட்டுகளையும், அதிமுக கூட்டணி 32 முதல் 38 சதவீத ஓட்டுகளையம், பாஜக 15 முதல் 21 சதவீத ஓட்டுகளையும், சீமானின் நாம் தமிழர் கட்சி 4 முதல் 6 சதவீத ஓட்டுகளையும், மற்றவர்கள் ஒன்று முதல் 3 சதவீத ஓட்டுகளையும் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

x