கட்சிகளுக்கு ரூ.200 கோடி நன்கொடை... வேதாந்தா நிறுவனம் தாராளம்!


வேதாந்தா

கடுமையான நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதற்காக ரூ.200 கோடியை ஒதுக்கி, வேதாந்தா குழுமத்தின் நிர்வாகக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் வேதாந்தா லிமிடெட் நிறுவனமும் ஒன்று. வேதாந்தா லிமிடெட் , ஜனவரி மாதம் வரவிருக்கும் டாலர் மதிப்புள்ள கடன் பத்திரங்களுக்குச் சுமார் 1 பில்லியன் டாலர் தொகையை வழங்குவதற்கு நிதி திரட்டும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அத்தகைய கடுமையான நிதிச் சுமை இருந்தபோதிலும் அரசியல் கட்சிகளுக்கு ரூ. 200 கோடி பங்களிப்பை வழங்க அந்நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதற்காக ஜூன் 2022ல் ஒப்புக்கொள்ளப்பட்ட பயன்படுத்தப்படாத ரூ.57 கோடி வரம்பைப் பயன்படுத்தவும் நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் மார்ச் 2025 வரையில் தற்போது அறிவிக்கப்பட்ட 200 கோடி ரூபாயையும் சேர்த்து அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாகவும், அன்பளிப்பாகவும் நிதியுதவியைச் செய்யும் எனத் தெரிகிறது.

வேதாந்தா நிறுவனத்தின் நிர்வாகக் குழுவின் தீர்மானத்தின்படி, நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் மற்றும் துணைத் தலைவர் நவீன் அகர்வால் ஆகியோர் இந்தத் தொகையை நேரடியாகவோ அல்லது தேர்தல் டிரஸ்ட் வாயிலாகவோ, தேர்தல் பத்திரங்கள் மற்றும் பிற வடிவத்திலும் பயன்படுத்த அதிகாரம் பெற்றுள்ளனர்.

வேதாந்தா நிறுவனம் அரசியல் கட்சிகளுக்குத் தேர்தல் பத்திரங்கள் மூலம் கடந்த 5 வருடத்தில் 457 கோடி நன்கொடை அளித்துள்ளது. இதில் நடப்பு நிதியாண்டில் மட்டும் 155 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளது. இந்த 155 கோடி ரூபாய் அளவீடு ஜூன் மாத முடிவில் வெளியிடப்பட்டது.

இதையும் வாசிக்கலாமே...

x