ஏனாம் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள் அகற்றம்: நீர் பரிசோதனை தீவிரம்


புதுச்சேரி: ஏனாம் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள் அகற்றப்பட்டு, இத்தண்ணீர் குடிநீருக்கு பயன்படுவதால் பரிசோதனைக்காக நீர் ஆந்திர மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

புதுவை மாநிலத்தின் ஏனாம் பிராந்தியம் ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகேயுள்ளது. இங்கு பொதுப் பணித்துறை சார்பில் 4 ஏக்கர் பரப்பளவு கொண்ட நாலா குளத்தில் நீர் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதில் உள்ள நீர் சுத்திகரிக்கப்பட்டு குடிநீருக்கும் பயன்படுத்தப்படுகிறது.

இக்குளத்தில் இருந்த ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து மிதந்தன. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியது. தகவல் அறிந்து பொதுப்பணித்துறையினர் வந்து உள்ளூர் மீனவர்களை கொண்டு இறந்த மீன்களை உடனே அகற்றினார்கள். இதுதொடர்பாக பொதுப் பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, "குளத்தை குத்தகைக்கு விட்டு 10 ஆண்டுகளுக்கு மேலானதால் 15 கிலோ வரை எடையில் மீன்கள் வளர்ந்து செழித்து காணப்பட்டது.

பொதுப்பணித்துறையினரும் மீனவர்களும் இறந்த மீன்களை குவியல் குவியலாக அகற்றும் பணியில் ஈடுபட்டனர். குளத்தின் நீர் குடிநீருக்கு பயன்படுத்துவதால் உடனடியாக சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. குளத்து நீர் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டு காக்கிநாடா ஆய்வு கூடத்திற்கு சோதனைக்கு அனுப்பியுள்ளோம்.

முடிவு வரும் வரை மற்றொரு குளத்தில் இருந்து பொது மக்களுக்கு குடிநீர் வினியோகம் நடக்கும். இதனால் பொது மக்கள் பீதியடைய வேண்டாம் இது போன்ற பாதிப்பு வேறு எந்த நீர்நீலையில் ஏற்பட்டுள்ள என ஆய்வு செய்து வருகிறோம்" என்றனர்.

x