தென் மாவட்ட வெள்ளத்தைவிட இதுதான் முதல்வருக்கு முக்கியம்! தொல்.திருமாவளவன் பேட்டி


திருமாவளவன்

நாடாளுமன்றத்துக்குள் இருவர் அத்துமீறி நுழைந்து கலர் புகைக் குப்பிகளை வீசிய விவகாரம் நாடாளுமன்றத்தையே ஸ்தம்பிக்க வைத்திருக்கிறது. இந்த விவகாரத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டாலும் எதிர்க்கட்சிகளின் ஆத்திரமும் ஆர்ப்பரிப்புகளும் இன்னும் அடங்கவில்லை.

நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சிகள், பிரதமரும் உள்துறை அமைச்சரும் இந்த சம்பவம் தொடர்பாக முறையான விளக்கம் அளிக்க வேண்டும் என்கின்றன. உரிய விளக்கம் அளித்தாகிவிட்டது என பாஜக சப்பைக்கட்டு கட்டுகிறது.

இதற்கு நடுவே, இந்த விவகாரம் தொடர்பாக அவைக்குள் அமளியில் ஈடுபட்டதாக 146 எம்பி-க்கள் தொடர்ச்சியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள். இதில் தமிழக எம்பி-க்களும் இருக்கிறார்கள். இந்த நிலையில் விசிக தலைவரும் எம்பி-யுமான தொல். திருமாவளவனிடம் பேசினோம். இனி அவரது பேட்டி...

நாடாளுமன்ற அவைக்குள்

நாடாளுமன்றத்தில் நடந்த அத்துமீறலை எப்படி பார்க்கிறீர்கள்?

நாடாளுமன்ற வளாகத்தில் அத்துமீறி இரண்டு பேர் உள்ளே நுழைந்திருக்கிறார்கள். வண்ணப்புகை குப்பிகளை வீசி இருக்கிறார்கள். இத்தனை பாதுகாப்பையும் மீறி இவர்கள் எப்படி உள்ளே நுழைந்தார்கள்... ஜனநாயகத்தின் தூணாக பார்க்கப்படும் நாடாளுமன்றத்திலேயே இத்தகைய பாதுகாப்பு குறைபாடு என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

இந்தியாவையே அச்சுறுத்தும் வகையில் இந்த நடவடிக்கைகள் அமைந்திருக்கிறது. இது ஜனநாயகத்துக்கு விடுக்கப்பட்ட சவால். நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறித்து விவாதிக்க வேண்டும், உள்துறை அமைச்சர் இது தொடர்பாக விளக்கமளிக்க வேண்டும், அத்துமீறி வந்தவர்களுக்கு அனுமதிக் கடிதம் கொடுத்த பாஜக உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நியாயமான கோரிக்கையை முன்வைக்கிறோம். அதற்கு பதில் சொல்லாமல் எதிக்கட்சி எம்பி-க்களை முடக்கும் வகையில் அடாவடித்தனத்தில் ஆட்சியாளர்கள் இறங்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. வரலாற்றில் இல்லாத வகையில், 146 எம்பி-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்கள். இது ஜனநாயகத்தை ஒடுக்கும் செயல்.

எம்பி-க்கள் நாடாளுமன்ற விதிகளை மீறியதால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்கிறதே பாஜக..?

பாஜகவினரிடமிருந்து இதைத்தான் எதிர்பார்க்க முடியும். நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி உள்ளது. அதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என நாங்கள் கோரிக்கை வைக்கிறோம். நாடாளுமன்றத்தில் இருவர் அத்துமீறி நுழைந்தது திட்டமிட்ட செயலோ என்ற சந்தேகம் எங்களுக்கு இருக்கிறது. இந்த அத்துமீறல் நடந்த அரை மணி நேரத்தில் மீண்டும் அவையைக் கூட்டுகிறார்கள் என்றால் என்ன காரணம்? அவர்கள் வீசியது நச்சுப்புகை இல்லை என்பது முன்னரே சபாநாயகருக்கு தெரியுமோ என்றெல்லாம் ஐயம் எழுகிறது.

இவர்கள் திட்டமிட்டே இந்தச் செயலை நடத்தியிருக்கிறார்கள் ஏனென்றால், இவர்கள் விரும்புகின்ற மசோதாக்களை நிறைவேற்ற வேண்டும். அப்போது எதிர்க்கட்சி எம்பி-க்கள் அவையில் இருந்தால் அதற்கு எதிராகக் குரல் கொடுப்பார்கள். அதனால் மசோதாவை நிறைவேற்ற முடியாமல் போகலாம். இதையெல்லாம் திட்டமிட்டுத்தான் எதிர்க்கட்சி எம்பி-க்களை வெளியேற்றிவிட்டு அவர்கள் நினைத்த மசோதாக்களை நிறைவேற்றி இருக்கிறார்கள்.

இதற்கு முன்பு எத்தனையோ முறை எதிர்க்கட்சி எம்பி-க்கள் அவைக்கு நடுவே சென்று கோஷம் எழுப்பி, பேப்பரை கிழித்தெல்லாம் வீசி இருக்கிறார்கள்; குழப்பம் செய்திருக்கிறார்கள். ஆனால் அப்போதெல்லாம் இப்படி கொத்துக் கொத்தாக எம்பி-க்கள் சஸ்பெண்ட் செய்யப்படவில்லை.

இந்த விவகாரத்தில் மட்டும் இவர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்றால் அது சந்தேகமாக உள்ளது. ஏனென்றால், அடுத்து வரக்கூடியது பட்ஜெட் கூட்டத்தொடர். இவர்கள் நினைக்கின்ற மசோதாக்களை அதில் நிறைவேற்ற முடியாது. அதனால் இப்போதே நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு இந்தச் செயலை அரங்கேற்றி உள்ளார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.

அதற்காக... துணை ஜனாதிபதியை உருவகேலி செய்வதெல்லாம் சரியானா செயலா?

இதில் உருவகேலி என்று எதுவும் கிடையாது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பி-க்கள் ஒன்று கூடி ஒரு அவை எப்படி நடக்கும் என்பதை செய்து காட்டியிருக்கிறார்கள். இதுபோல இதற்கு முன்பும் பல உதாரணங்கள் உள்ளது. தங்களுக்கு ஏற்பட்ட வலி, பாதிப்புகளை உறுப்பினர்கள் சபைக்கு வெளியே நாகரிகமாக எடுத்துரைத்திருக்கிறார்களே தவிர இதை தனி நபர் தாக்குதல் என்றெல்லாம் எடுத்துக்கொள்ள முடியாது.

குடியரசு தலைவர் திரெளபதி முர்மு

எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளுக்கு குடியரசு தலைவர் வருத்தம் தெரிவித்துள்ளாரே..?

நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப் பட்டிருக்கிறது. அங்கு எதிர்க்கட்சிகளின் குரல்வளை நசுக்கப்படுகிறது. 146 எம்பி-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார்கள். அப்போதெல்லாம் வராத மன வருத்தம் தற்போது குடியரசு தலைவருக்கு வந்திருக்கிறதென்றால் இது அப்பட்டமான அரசியல் இல்லையா?

குடியரசுத் தலைவர் என்பவர் அனைவருக்கும் பொதுவானவர். அவர் அனைத்துக்கும் குரல் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் இதற்கு மட்டும் அவர் குரல் கொடுக்கிறார் என்றால் இது அவருடைய அப்பட்டமான அரசியல் போக்கில்லாமல் வேறென்ன? சொல்லப்போனால், குடியரசு தலைவரின் இந்தச் செயல்தான் என்னைப் போன்ற பாதிக்கப்பட்டவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழை வெள்ளம்.

தென் மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும் போது தமிழக முதல்வர் இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்றதாக விமர்சிக்கப்படுகிறதே..?

இது அற்பமான அரசியல். நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டிருக்கிறது. எதிர்கட்சிகளின் குரல்வளை நசுக்கப்பட்டிருக்கிறது. அதை விவாதிக்கவே இந்தியா கூட்டணி கூடியது. 22-ம் தேதி நாடு முழுவதும் போராட்டம் நடத்துவதற்கான முடிவுகளும் இதில் எடுக்கப்பட்டுள்ளது. அப்படியிருக்கையில் முதல்வர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டதை விமர்சிப்பது ஏற்புடையது அல்ல.

தென் மாவட்ட மக்கள் மழையால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அதைவிட நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. எதிர்க்கட்சி எம்பி-க்கள் கொத்துக்கொத்தாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதுவும் ஒரு பேரிடர் தான். தென் மாவட்ட வெள்ளத்தை விட இதுதான் மிகவும் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம். ஏனென்றால், தென் மாவட்டங்களில் பத்துக்கும் மேற்பட்ட அமைச்சர்கள் முகாமிட்டு மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்தியாவுக்கே ஒரு பிரச்சினை எனும்போது அங்கு முதல்வர் இருந்தாக வேண்டும். தென் மாவட்டங்கள் பாதிக்கப்படும் போது முதல்வர் ஒன்றும் கிரிக்கெட் மேட்ச் பார்க்கச் செல்லவில்லை. சுற்றுலா செல்லவில்லை. அவர் இந்தியாவின் பிரச்சினைக்காக இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்றார்.

எம்பி-க்கள் சஸ்பெண்டை எதிர்த்து தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் கட்சிகள் அமைதிகாத்தபோது, விசிகவினர் மட்டும் போராட்டத்தில் ஈடுபட்டது ஏன்?

போராட்டம் நடத்த வேண்டும் என்று தலைமைக் கழகத்திலிருந்து விசிகவினருக்கு எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. ஜனநாயகத்தின் குரல்வளை நசுக்கப்படும்போது அதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்ற தனிநபர் உந்துதலின் காரணமாகவே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது இது தேவையான ஒன்றும்கூட.

முரண்பாடுகளுக்கு மத்தியில் இந்தியா கூட்டணி எடுக்கும் முன்னெடுப்புகள் பலனளிக்கும் என்று நம்புகிறீர்களா?

இந்தியா கூட்டணி நிச்சயமாக ஒற்றுமையுடன் சிறப்பாக செயல்படுகிறது. மக்களவைத் தேர்தல் வரை இந்தியா கூட்டணி நீடிக்காது என்பது பாஜகவின் பகல் கனவாக இருக்கலாம். நிச்சயமாக இந்தக் கூட்டணி பாஜகவுக்கு எதிராக வலுவான தளத்தை அமைத்து வருகிறது. இந்தியா கூட்டணி வலுவாக இல்லை என்றால் அது குறித்து ஏன் இவர்கள் பேச வேண்டும். இந்தியா கூட்டணி குறித்த அச்சம் வந்திருப்பதாலேயே பாஜகவினர் பதறுகிறார்கள்.

x