முதல்கட்ட தேர்தலுக்கு முன்பே ரூ.4,650 கோடி பறிமுதல்... வரலாற்றில் முதல்முறையாக தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை!


இந்திய தேர்தல் ஆணையம்

இந்திய தேர்தல் வரலாற்றிலேயே முதல்முறையாக தேர்தல் பறக்கும் படைகள் மூலமாக நாடு முழுவதும் 4,650 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் வருகிற ஏப்ரல் 19-ம் தேதி துவங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் 102 தொகுதிகளில் முதல் கட்டமாக வருகிற ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

இதனிடையே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மார்ச் 16-ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படைகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என கண்காணித்து வருகின்றனர்.

கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்ட பணம்

49 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுத்து செல்பவர்கள் உரிய ஆவணங்களை கைகளில் வைத்திருக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. அதற்கு மேல் உள்ள தொகை பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்படும். உரிய ஆவணங்களை ஒப்படைப்போருக்கு பணம் திரும்ப வழங்கப்படும். அதேபோல் 10 லட்சத்திற்கும் மேல் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டால் உடனடியாக, அது வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தங்கக்கட்டிகள் (கோப்பு படம்)

அந்த வகையில் இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக முதல் கட்ட தேர்தல் துவங்குவதற்கு முன்பாகவே இதுவரை 4,650 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் நகைகள், பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கைப்பற்றப்பட்ட மொத்த பொருட்களில் 45 சதவீதம் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது மொத்தமாக 3,475 கோடி ரூபாய் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் பறக்கும் படை சோதனை

கடந்த மார்ச் 16-ம் தேதி முதல் தினமும் சராசரியாக ரூ.100 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மற்றும் நொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை நாட்டிலேயே அதிகபட்சமாக ராஜஸ்தானில் ரூ.778.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குஜராத்தில் 605.33 கோடியும், தமிழ்நாட்டில் ரூ.460.8 கோடியும், மகாராஷ்டிராவில் ரூ.431.3 கோடியும், பஞ்சாபில் ரூ.311.8 கோடியும் பணம் மற்றும் பொருட்களாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


இன்றும், நாளையும்.... சென்னை வானிலை மையம் தந்த சர்ப்ரைஸ்!

பரபரப்பு... அமைச்சர் உதயநிதி வந்த ஹெலிகாப்டரை சுற்றி வளைத்த தேர்தல் பறக்கும் படை!

x