அடுத்தடுத்து தண்டிக்கப்படும் அமைச்சர்கள்... தவிதவிப்பில் திமுக!


பொன்முடி நீதிமன்றத்தில் ஆஜரான போது...

வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் திமுக மூத்த அமைச்சர் பொன்முடிக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனையும் 50 லட்ச ரூபாய் அபராதமு விதித்து தீர்ப்பெழுதி இருக்கிறது. இதே அளவு தண்டனையும் அபராதமும் அவரது மனைவி விசாலாட்சிக்கும் விதிக்கப்பட்டுள்ளது.

ஜூனியராக இருந்தாலும் திமுகவின் பவர்ஃபுல் அமைச்சராக வலம் வந்த செந்தில் பாலாஜியை ஜாமினில் வெளிவரமுடியாத அளவுக்கு மாதக் கணக்கில் சிறையில் சிக்கவைத்திருக்கிறது அமலாக்கத்துறை. அடுத்த அதிரடியாக அமைச்சர் பொன்முடி இப்போது சிறை செல்லும் கட்டத்துக்கு வந்திருக்கிறார்.

செந்தில் பாலாஜியைத் தொடர்ந்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்துக்குள் இருக்கிறார். அதேபோல் பொன்முடியைத் தொடர்ந்து தங்களுக்கும் அத்தகைய சிக்கல் வருமோ என்ற அச்சத்தில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனும் தங்கம் தென்னரசுவும் இருக்கிறார்கள். எனென்றால் இவர்களும் வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் கீழமை நீதிமன்றங்களால் பொன்முடியைப் போலவே நிரபராதி என விடுவிக்கப்பட்டவர்கள்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர்கள் பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் கீழமை நீதிமன்றங்களில் விடுவிக்கப்பட்ட போதும், இவர்கள் சம்பந்தப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து மீண்டும் விசாரணைக்கு எடுத்தார். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்துக்குப் போனார் பொன்முடி. ஆனால், விசாரணைக்கு தடைவிதிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், ஆனந்த் வெங்கடேஷின் நடவடிக்கையைப் பாராட்டவும் செய்தது.

2006-11 காலகட்டத்தில் அமைச்சராக இருந்த பொன்முடி வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.75 கோடி அளவுக்கு சொத்துச் சேர்த்ததாக அவர் மீதும், அவருடைய மனைவி விசாலாட்சி உள்ளிட்டோர் மீதும் 2011-ல் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம் 2016-ல் பொன்முடியையும் அவரது மனைவியையும் வழக்கிலிருந்து விடுவித்தது.

அப்போது சட்ட அமைச்சராக இருந்த சி.வி.சண்முகம் இதை விடவில்லை. உச்ச நீதிமன்றம் வரைக்கும் மேல்முறையீடு செய்யவைத்து வழக்கிற்கு மீண்டும் உயிரூட்டினார். அந்த வழக்கில் தான் இப்போது பொன்முடிக்கும் அவரது மனைவிக்கும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதில்லாமல், செம்மன் குவாரி தொடர்பான அமலாக்கத் துறையின் வழக்கும், 1996 - 2001 காலத்தில் பொன்முடி தரப்பு மீது போடப்பட்ட ஊழல் வழக்கும் (இந்த வழக்கில் தான் வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் பொன்முடியை விடுவித்தது. இந்த வழக்கைத் தான் மீண்டும் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்திருக்கிறார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்) இன்னமும் நிலுவையில் இருக்கிறது.

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

2006-11 காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக பொன்முடி மீது தொடரப்பட்ட வழக்கின் மறு விசாரணையில் அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டுமுடித்த நீதிபதி ஜெயச்சந்திரன், பொன்முடியும் அவரது மனைவி விசாலாட்சியும் குற்றவாளிகள் என கடந்த 19-ம் தேதி உறுதிப்படுத்தினார். 21-ம் தேதி அவர்களுக்கான தண்டனை விவரங்களை அறிவித்த நீதிபதி, இருவருக்கும் தலா மூன்றாண்டு சிறையும் தலா 50 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

இருந்தபோதும் இருவரும் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைய 30 நாட்கள் அவகாசம் அளித்து நீதிபதி உத்தரவிட்டார். தீர்ப்பு வெளியானதுமே பொன்முடி தனது அமைச்சர் பதவியை இழந்தார். (இருப்பினும் அரசின் அதிகாரபூர்வ இணைய தளத்தில் இன்னமும் இலாகா இல்லாத அமைச்சராக பொன்முடியின் பெயர் இருக்கிறது.) அவர்வசம் இருந்த உயர்கல்வித் துறையானது அமைச்சர் ராஜ கண்ணப்பன் வசம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டது.

இவரைப் போலவே அமைச்சர் தங்கம் தென்னரசு, கடந்த 2006-11 காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.76.40 லட்சம் அளவுக்கு சொத்து சேர்த்ததாக அவர் மீதும் அவரது மனைவி மணிமேகலை மீதும் 2012-ல் வழக்குப் பதிவு செய்தது லஞ்ச ஒழிப்புத் துறை. இந்த வழக்கிலிருந்து இவர்கள் இருவரையும் விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமை குற்றவியல் நீதிமன்றம், கடந்த 2022 டிசம்பர் 13-ல் தீர்ப்பெழுதியது. அதே காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக 44 லட்சம் ரூபாய் சொத்துச் சேர்த்ததாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி, தொழிலதிபர் சண்முக மூர்த்தி ஆகியோர் மீதும் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கையும் விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமை குற்றவியல் நீதிமன்றம், கடந்த ஜூலை 20-ம் தேதி மூவரையும் வழக்கிலிருந்து விடுவித்தது.

தங்கம் தென்னரசு

இந்த இரண்டு வழக்குகளையும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளார். பொன்முடி வழக்கில் வந்த அதே தீர்ப்பு இவர்கள் வழக்கிலும் வரலாம் என்று சட்டப்புள்ளிகள் சொல்கிறார்கள். இதேபோல், மூத்த அமைச்சர்களான துரைமுருகனும், ஐ.பெரியசாமியும் இன்னொரு அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணனும் அமலாக்கத்துறையின் விசாரணைக்குள் இருக்கிறார்கள்.

அமைச்சர்களுக்கு எதிரான இந்த நடவடிக்கைகளை திமுக தரப்பில் மிகவும் சீரியஸாகப் பார்க்கிறார்கள். சட்ட நடவடிக்கைகள் திமுக அமைச்சர்களுக்கு எதிராக மட்டும் பாய்வது ஏன் என்ற ஆதங்கக் கேள்வியும் அவர்களுக்குள் இருக்கிறது.

கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

இது குறித்து இதற்கு முன்பு பேட்டி ஒன்றில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “அதிமுக அமைச்சர் களாக இருந்த ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வளர்மதி உள்ளிட்டவர்களும் ஊழல் வழக்கிலிருந்து விடுவிக்கப் பட்டுள்ளனர். அவர்கள் எந்த முகாந்திரத்தின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டார்களோ, அந்த அடிப்படையில்தான் திமுக அமைச்சர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஆர்.எஸ். பாரதி

இன்றைக்கும் ஓபிஎஸ்சும் நத்தம் விசுவநாதனும் எம்எல்ஏ-க்களாகத்தான் உள்ளனர். ஆனால், அவர்களையெல்லாம் விட்டுவிட்டு திமுக அமைச்சர்களை மட்டும் குறிப்பிட்டு தேர்ந்தெடுத்து அவர்கள் தொடர்பான வழக்குகளை மட்டும் தாமாக முன் வந்து மீண்டும் விசாரணைக்கு எடுக்கிறது உயர் நீதிமன்றம். இப்படி விசாரிக்கும் உரிமை நீதிமன்றங்களுக்கும் நீதிபதிகளுக்கும் இருக்கிறது என்றாலும் பாகுபாடு பார்த்து விசாரணைக்கு எடுக்கக்கூடாது” என்று சொல்லியிருந்தார்.

பொன்முடி

ஊழல் வழக்குகளில் மாத்திரமல்ல... சனாதனம் குறித்தான வழக்கிலும் திமுக அமைச்சர்களுக்கு எதிராக சாட்டையைச் சொடுக்கி இருக்கிறது உயர் நீதிமன்றம்.

அமைச்சர் உதயநிதிக்கு எதிரான சனாதன சர்ச்சை தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், “சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்ட தமிழக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை, தனது கடமையைச் செய்யத்தவறி குற்றம் புரிந்துள்ளது. சனாதன ஒழிப்பு குறித்து பேசிய அமைச்சர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்” என்று சொன்னார்.

அமைச்சர்களுக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகளை சட்டரீதியாக எதிர்கொள்வதற்கான கட்டமைப்பை திமுக வைத்திருக்கிறது. ஆனால், இதையெல்லாம் அரசியல் ரீதியாக எதிர்கொள்வதுதான் அந்தக் கட்சிக்கு பெரும் சவாலாக இருக்கும்.

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் அண்ணாமலை போன்றவர்கள் இதை வைத்து திமுகவை ஊழல் கட்சியாக சித்தரிக்க முயல்வார்கள். அதை சமாளிக்க திமுக மிகுந்த சிரமப்பட வேண்டும். அலைக்கற்றை ஊழல் வழக்கில் திமுகவுக்கு எதிராக கிளப்பிவிடப்பட்ட பிரச்சாரம் அந்தக்கட்சிக்கு பெரும் பின்னடைவைக் கொடுத்தது. மத்தியில் இருந்த காங்கிரஸ் கூட்டணி அரசாங்கம் ஆட்சி அதிகாரத்தை இழந்ததற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. இதையெல்லாம் திமுகவினர் இப்போது சிந்திக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

வழக்கறிஞர் சரவணன்

இதுகுறித்து திமுக செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் சரவணனிடம் பேசினோம். ‘’இந்த விஷயத்தில் என்ன நடக்கிறது என்பது மக்களுக்குத் தெரியும். அனைத்தையும் அவர்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதனால் இதைப்பற்றி விமர்சிக்கவோ, பேசவோ தயாராகயில்லை. அப்படிச் செய்தால் அது நீதிமன்ற அவமதிப்பாக எடுத்துக்கொள்ளப்படலாம்.

இதுபோன்ற வழக்குகளை சம்பந்தப்பட்டவர்களே கவனித்தும், சமாளித்தும் கொள்வார்கள். ஏற்கெனவே கீழமை நீதிமன்றங் களால் அவர்கள் விடுவிக்கப்பட்டவர்கள் தான். அந்த தீர்ப்பையே மேல்முறையீடு மூலம் உறுதி செய்திட அவர்கள் சட்டத்தின் உதவியை நாடுவார்கள். நீதிமன்றங்கள் மீதும், சட்டத்தின்மீதும் திமுகவுக்கு நம்பிக்கை உள்ளது. ஆகவே, எதையும் சட்டரீதியாக எதிர்கொள்வோம்" என்றார் அவர்.

ஊழல் வழக்குகளில் பெரும்பாலும் கீழமை நீதிமன்ற தீர்ப்புகளே உறுதி செய்யப்பட்டிருக்கின்றன. ஒருசில வழக்குகளில் தண்டனைகள் வேண்டுமானால் குறைக்கப்பட்டிருக்கலாம். ஏற்கனெவே பொன்முடி சம்பந்தப்பட்ட இன்னொரு ஊழல் வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து மறு விசாரணைக்கு எடுத்ததை உச்ச நீதிமன்றமே பாராட்டி இருக்கிறது. அப்படியான சூழலில் மேல்முறையீட்டில் பொன்முடிக்கு சாதகமான தீர்ப்பு வெளிவருவதற்கான சாத்தியக்கூறுகள் மிக மிகக் குறைவுதான்!

x