கும்பிடுவது போல கையை வைத்து கொண்டு தானே காருக்குள் இருந்தேன்... போலீஸாருடன் அண்ணாமலை வாக்குவாதம்!


போலீஸாருடன் அண்ணாமலை வாக்குவாதம்

இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்வதாகக் கூறி கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் பிரச்சார வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் போலீஸாருடன் அண்ணாமலை வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, சாலை மறியலும் நடைபெற்றதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.

கோவையில் அண்ணாமலை

கோவை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் அண்ணாமலை தொகுதிக்கு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று முன்தினம் இரவு 10 மணி தாண்டியும் அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக சர்ச்சைகள் எழுந்தன. இந்நிலையில் நேற்று இரவும் அவர் இரவு பத்து மணியை தாண்டி பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக தேர்தல் அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.

சூலூரில் காரில் அமர்ந்தபடி மக்களை நோக்கி கை எடுத்து கும்பிட்டவாறு அண்ணாமலை சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் திடீரென்று அங்கு சென்ற போலீஸார் அண்ணாமலையின் காரை தடுத்தது நிறுத்தினர். இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்யக்கூடாது. இதனால் காரை தடுத்து நிறுத்துவதாக அவர்கள் அண்ணாமலையிடம் கூறினர். இதைக்கேட்டு அண்ணாமலை கடும் கோபம் அடைந்தார்.

அண்ணாமலை

காரில் இருந்து இறங்கிய அவர் போலீஸாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ‛‛நான் இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்யவில்லை. பிரச்சாரத்தை முடித்துவிட்டு காரில் வீட்டுக்கு தான் செல்கிறேன். நாங்கள் மைக்கை ஆஃப் செய்து வைத்துள்ளோம். 10 மணிக்கு மேல் நான் பிரச்சாரம் செய்ததாக ஒரு வீடியோவை காட்டுங்கள் பார்க்கலாம். தாமரை என்ற வார்த்தையை சொன்னேனா? எனக்கு ஓட்டுப்போடுங்கள் என்று கேட்டேனா? எதுவுமே நான் செய்யவில்லை. கையைக் கும்பிடுவது போல வைத்து கொண்டு காருக்குள் அமர்ந்து இருந்தேன். இது எப்படி பிரச்சாரமாகும்?

இரவு 10 மணிக்கு பிரச்சாரத்தை முடித்துவிட்டு வேட்பாளர் வீட்டுக்குச் செல்கிறார். இரவு 10.30 மணிக்கு ஒரு இடத்தில் காரை நிறுத்தி டீ குடிக்கக் கூடாதா? நீங்கள் ஒருதலைபட்சமாக செயல்படுகிறீர்கள்'' என ஆவேசமாக பேசினார். மேலும் பாஜகவினர் அண்ணாமலைக்கு ஆதரவாக அங்கு திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த இரவு நேரத்தில் சுமார் ஒருமணிநேரத்துக்கும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பதற்றமான சூழல் நிலவியதால் கூடுதல் போலீஸார், மத்திய பாதுகாப்பு படையினர் அங்கு வரவழைக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து பாஜகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார் போராட்டத்தை கைவிடச் செய்தனர். இந்த சம்பவம் நேற்று இரவில் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அனுமதியின்றி கூடியது, பொதுமக்களுக்கு இடையூறு செய்தது உள்ளிட்ட பிரிவுகளில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை உள்ளிட்ட 300 பேர் மீது சூலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலை சிங்காநல்லூர் காவல் நிலையத்திலும் அண்ணாமலை உள்ளிட்டவர்களின் மீது நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

x