குறைந்தபட்ச ஆதார விலை குறித்து பாஜகவின் தேர்தல் அறிக்கையில் எந்தவித வாக்குறுதியும் அளிக்கப்படவில்லை என டெல்லி போராட்டத்தை முன்னெடுக்கும் தேசிய விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
வேளாண் உற்பத்திக்கான அடிப்படை செலவு, உரம், இடு பொருட்கள் விலை உள்ளிட்ட மொத்த செலவினத்தை கணக்கிட்டு, மொத்த உற்பத்தி செலவை விட 50 சதவீதம் கூடுதலாக வேளாண் விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பரிந்துரைகள் வேளாண் விஞ்ஞானி எம் எஸ் சாமிநாதன் தலைமையிலான குழுவினரால் 2010 ம் ஆண்டில் வழங்கப்பட்டன. ஆனால், 14 ஆண்டுகளாகியும் அந்த பரிந்துரைகள் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.
2014 மக்களவை தேர்தலின்போது விவசாய விளை பொருள்களுக்கு இரு மடங்கு விலை வழங்கப்படும் என்று மோடி கூறினார். ஆனால், பிரதமராகி 10 ஆண்டுகளான பிறகும் தமது வாக்குறுதியை அவர் நிறைவேற்றவில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகிறார்கள். புதிய வேளாண் சட்டங்கள் அமல்படுத்தப் பட்டபோது அதை எதிர்த்தும், குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தினர்
அதைத்தொடர்ந்து புதிய வேளாண் சட்டங்கள் மத்திய அரசால் திரும்ப பெறப்பட்டது. குறைந்தபட்ச ஆதார விலை விவகாரத்தில் பாஜக அரசு இன்னும் விளக்கம் கொடுக்கவும்வில்லை. இதை அடுத்து டெல்லி எல்லையை முற்றுகையிட்டு விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்த நிலையில் இன்று வெளியிடப்பட்ட பாஜக தேர்தல் அறிக்கையில் இது குறித்த எந்த வாக்குறுதிகளும் அளிக்கப்படவில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம், விவசாய கடன்கள் தள்ளுபடி போன்ற விவசாயிகளுக்கு உதவும் வகையிலான எந்த விதமான வாக்குறுதிகளும் பாஜக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்படவில்லை என தேசிய அளவிலான விவசாயிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.