அதிமுக அலுவலகம்!
சான்றுகள் குறித்த சஞ்சலமின்றி என அண்ணாதுரை குறித்து அண்ணாமலை சொன்ன குட்டி வரலாறு கூட்டணித் தகராறாக மாறியது குறித்து குசுகுசுவெனப் பேசி குமைந்து கொண்டிருந்தார்கள் அதிமுகவினர்.
நோட்டாவுடன் போட்டி போடும் ‘நட்டா’ கட்சி, கூட்டணியில் இருந்துகொண்டே காட்டமாகக் கலாய்த்ததாக அனைவரும் கூட்டமாக வாட்டமடைந்திருந்தார்கள். ‘சிங்கக் கூட்டத்தைச் சீண்டிய சிறுநரியை’ப் பங்கம் செய்ய ஆரம்பித்த உடனேயே, கட்சித் தலைமை கைகளைக் கட்டிப்போட்டுவிட்டதால் கடமையையும் கண்ணியத்தையும் கட்டுப்பாட்டுடன் காக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியிருந்தார்கள்.
ஐடி துறையை வைத்து அடக்கி முடக்கிவைப்பவர்களை, ஐடி விங் மூலமேனும் மடக்கிப் பார்க்கலாம் என்று மனப்பால் குடித்திருந்த ஜெயக்குமார், மேலிடம் வேலி போட்டதை ஜீரணிக்க முடியாத சிரமத்தில் இருந்தார். “இத்தோட 234 தடவை எச்சரிச்சும், மறுவரையறை செஞ்சுக்காம மறுபடி மறுபடி அண்ணாமலை அவதூறு பண்றாரே...” என்று மருகிக்கொண்டிருந்தார். சீற்றத்துக்குப் பேர்போன சி.வி.சண்முகமோ, தேற்ற முடியாத சோகத்தில் இருந்தார்.
எம்ஜிஆர் காலத்துத் தொண்டர் ஒருவர், “அண்ணாமலை சொன்னதுல பாதிதான் உண்மைன்னு பத்திரிகையெல்லாம் சொல்லுது. அவருக்கு என்ன? அவர் என்ன வேணும்னாலும் பேசலாம். ஆனா, நமக்குன்னு ஒரு ஹிஸ்டரி இருக்குல்ல? அவர் சொன்ன தகவல் தப்புன்னு எப்படித்தான் ஸ்ட்ராங்கா நிரூபிக்கிறது?” என்று கேட்க, அதிமுக தலைவர்கள் செய்வதறியாது திகைத்தனர்.
கழகத்தில் புதிதாகச் சேர்ந்திருந்த 2கே கிட் தொண்டர் ஒருவர், “அண்ணாமலைக்கு ஹிஸ்டரியே தெரியாது தல! ஊழலுக்கு எதிரா உண்ணாவிரம் இருந்த அறிஞர் அன்னா ஹசாரேவை(!) பத்தி ஆதாரமில்லாம அபாண்டமாப் பேசிட்டார். சரி விடுங்க. இன்னைக்கு ட்ரெண்ட், டைம் மிஷின் டெலிபோன்தான். அதுல டயல் பண்ணி, அந்தக் காலத்துத் தலைவர்கள்கிட்டப் பேசி 1956-ல நடந்தது என்னான்னு கன்ஃபர்ம் பண்ணிக்கலாம்” என்று சொல்ல, அதிமுக அலுவலகம், ‘மார்க் ஆண்டனி’ செட்டாக மாறியது.
முதலில் யாருக்கு போன் போடுவது என்று அனைவரும் குழம்பி, இறுதியில் குத்துமதிப்பாக ஒரு எண்ணைச் சுழற்ற... எதிர்முனையில்… எம்ஜிஆர் கிடைத்தார்.
“இப்பத்தான் அண்ணாகிட்ட அரசியல் விவகாரம் பேசிட்டு வந்தேன். இதைப் பத்தியெல்லாம் ஒண்ணும் சொல்லலையே. அடுத்து ஒரு ஷூட்டிங் இருக்கு” என்ற எம்ஜிஆர், “அதுசரி... திமுகவுல இப்ப யார் யார் இருக்கா?” என்று கேட்டதும் திடுக்கிட்ட தலைவர்கள் போனைக் கட் செய்தனர்.
அடுத்த கால் கருணாநிதியிடம் சென்றது. “அண்ணா என்ன சொன்னார்ங்கிறதெல்லாம் இருக்கட்டும். நாங்க அரசியல் பண்ணிட்டு இருக்கோம். நீங்க இப்படியெல்லாம் எதுக்கு ஆராய்ச்சி பண்றீங்க?” என்று கருணாநிதி கேட்க, “எல்லாம் அண்ணாமலை கொளுத்திப்போட்ட விஷயத்தால வந்த குழப்பம்” என்றனர் ரத்தத்தின் ரத்தங்கள். “அண்ணாமலையா... யார் அது?” என்று கரகரப்புடன் மீண்டும் ஒலித்தது கருணாநிதியின் குரல். “அதெல்லாம் உங்க பேரன் உதயநிதிகிட்ட கேளுங்க... சொல்லுவார்” என்று கலகலப்பாகக் கட் செய்தனர் அதிமுகவினர்.
அடுத்த கால், யாரிடம் சென்றது என யாருக்கும் புரியவில்லை. விஷயத்தைச் சொன்னதும், “ஏம்பா ஏய்! அதான் கூட்டணி விவகாரத்துல குழப்பம் பண்ணக்கூடாது... அண்ணாமலை என்ன சொன்னாலும் அமைதி காக்கணும்னு சொல்லிருக்கேன்ல. நமக்கு வேற வழியே இல்லைன்னு வெளிப்படையாச் சொன்னாத்தான் புரியுமா?” என்று எரிச்சலுடன் ஒலித்தது அந்தக் குரல். எதிர்முனையில் இருந்தவர் - எடப்பாடி!