‘‘மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி என்பதைப் போல இருக்கிறது என்னுடைய நிலைமை. இத்தகைய சூழ்நிலையில் இருக்கும் என்னை மேலும் துன்பப்படுத்துவது போல திமுக நிர்வாகிகளோ, மூத்தவர்களோ, அமைச்சர்களோ நடந்துகொண்டால் நான் என்ன சொல்வது... யாரிடம் சொல்வது?
நாள்தோறும் காலையில் நம்மவர்கள் யாரும் எந்தப் புதுப் பிரச்சினையையும் உருவாக்கிவிடக்கூடாதே என்ற நினைப்போடுதான் நான் கண் விழிக்கிறேன். சில நேரங்களில் என்னை இது தூங்கவிடாமல்கூட ஆக்கிவிடுகிறது. பொது இடங்களில் சிலர் நடந்துகொண்ட முறையின் காரணமாக திமுக பழிகளுக்கும் ஏளனத்திற்கும் ஆளானது.’’
- கடந்த ஆண்டு அக்டோபர் 9-ம் தேதி சென்னை அமைந்தகரையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் நடந்த திமுக பொதுக் குழுக் கூட்டத்தில் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் பேசியதுதான் இது. அவர் எந்த நேரத்தில் பேசினாரோ... தொடர்ந்து திமுக மீது சர்ச்சைக் கணைகள் பாய்ந்த வண்ணம் இருக்கிறது.
அதில் லேட்டஸ்ட்... அமைச்சர் உதயநிதியின் ‘சனாதனத்தை ஒழிக்க வேண்டும்’ என்ற பேச்சு. இது நாடு முழுவதும் பலத்த சர்ச்சையையும் திமுக அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணியில் சலசலப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. வட மாநிலங்களில் உதயநிதிக்கு எதிராக வழக்குகளும் பாய்ந்திருக்கிறது. இப்போது அதே சனாதன அஸ்திரத்தை வட மாநிலங்களில் இந்தியா கூட்டணிக்கு எதிராகவே பாஜக திருப்பி வருகிறது.
இதையெல்லாம் திமுக மூத்த தலைவர்கள் அவ்வளவாய் ரசிக்கவில்லை. முதல்வர் ஸ்டாலினும் இந்த விவகாரம் தொடர்வதை விரும்பவில்லை. அதனால் தான் கடந்த வாரம் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ”பாஜக அரசின் ஊழல்களைப் பற்றித்தான் நாம் அதிகம் பேச வேண்டும். அதைப் பேசிவிடக் கூடாது என்பதற்காகத்தான் சனாதனத்தைப் பற்றி அந்தக் கட்சி பேசித் திசைதிருப்பிக் கொண்டு இருக்கிறது என்று திக தலைவர் வீரமணி குறிப்பிட்டுள்ள கருத்து மிகச் சரியானது. அதனையே திமுகவினரும் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பின்பற்ற வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
என்றாலும் உதயநிதி தொடர்ந்து, “திராவிட இயக்கம் ஆரம்பிக்கப்பட்டதே சனாதனத்தை எதிர்த்துத் தான். சனாதனத்தை ஒழிக்க தொடர்ந்து போராடுவேன்” என்று முழங்கி வருகிறார். இது மக்களவைத் தேர்தலில் வட மாநிலங்களில் இந்தியா கூட்டணிக்கு எதிர்மறையான விளைவை ஏற்படுத்துவதோடு திமுக ஆட்சிக்கும் சிக்கலை ஏற்படுத்தலாம் என்று திமுக மூத்த தலைவர்கள் அஞ்சுகின்றனர். அவர்களின் அந்த எண்ண ஓட்டத்தை கடந்த 17-ம் தேதி வேலூரில் நடந்த திமுக முப்பெரும் விழாவில் டி.ஆர்.பாலுவின் பேச்சு பிரதிபலித்தது. அந்த விழாவில் பேசிய டி.ஆர். பாலு திமுக தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் முன்னிலையில் வெளிப்படையாகவே உதயநிதியை எச்சரிக்கும் விதமாகப் பேசினார்.
‘‘இளைஞரணித் தலைவரைப் (உதயநிதி) பார்த்து பயந்து கொண்டிருக்கிறார்கள்... அவர் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்று. அவங்க அப்பாவைப் (ஸ்டாலினை) பார்த்தால் மட்டும்தான் அவர் பயப்படுகிறார். வேறு யாரைப் பார்த்தாலும் பயப்படுவது கிடையாது. அவர் பாட்டுக்கு என்ன வேண்டுமானாலும் பேசுகிறார். என்ன வேண்டுமானாலும் பேசலாம்... பேசிவிட்டு அதைச் சமாளிக்கலாம் என்ற நினைப்பில் அவர் பேசுகிறார். ஆனால், தன்னுடைய கையிலே வைத்துக் கொண்டிருக்கிற பொருள் கீழே விழுந்து உடைந்துவிடக் கூடாது என்கின்ற நல்ல எண்ணத்தையும் மனதிலே வைத்துக்கொண்டு மிகச் சிறப்பாக பணியாற்றுவது அவருடைய கடமை என்பதையும் நான் எச்சரிக்க விரும்புகிறேன்’’ என்றார் டி.ஆர். பாலு.
பாலுவின் இந்தப் பேச்சுக்கு எதிராகவோ உதயநிதிக்கு ஆதரவாகவோ சிறு சலசலப்புகூட கூட்டத்தில் எழாதது திமுகவினர் அவரது பேச்சை அமோதித்ததைக் காட்டியது. இருந்தாலும், ‘கொஞ்சம் ஓவராத்தான் போறோமோ...’ என்று பாலு சுதாரித்துக்கொண்டாரோ என்னவோ? தொடர்ந்து பேசுகையில் உதயநிதியைச் சமாதானப்படுத்தும் விதமாக, ‘‘உதயநிதி சொல்லாத வார்த்தைகளையும் அவர் சொன்னதாக திரித்துக் கூறுகிறார்கள். இந்தியா கூட்டணியில் உள்ளவர்களும் என்னிடம் உதயநிதி இப்படிப் பேசிவிட்டாரே என கேட்கிறார்கள். அவர்களுக்கு நான் மறுப்பு தெரிவித்து விளக்கம் கொடுத்துள்ளேன். ஆகவே, நாம் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியையும் மிக கவனமாக எடுத்துவைக்க வேண்டும் என்று அன்புத் தம்பியின் மீது உள்ள பாசத்தினாலும் சிறுவயதிலிருந்து நான் தூக்கி வளர்த்த பிள்ளை என்கிற காரணத்தினாலும் சொல்கிறேன்’’ என்று சுருதி இறங்கினார்.
”அப்பாவுக்கு மட்டும்தான் பயப்படுகிறார்” என டி.ஆர்.பாலு சொன்னாலும், “நிறுத்துங்கள்” என்று ஸ்டாலின் சொன்ன பிறகும் சனாதனம் குறித்து பேசிவருகிறார் உதயநிதி. இதை மேற்கோள் காட்டும் திமுக இளைஞரணியினர், “தம்பி ஒரு முடிவெடுத்துட்டா அவரு பேச்சை அவரே கேக்கமாட்டார் போலிருக்கே” என்று பெருமை பொங்குகிறார்கள்!
பெட்டிச் செய்தி:
ஏங்க... இதெல்லாமா காமெடி?
எப்போதும் கிண்டலாகப் பேசும் அமைச்சர் துரைமுருகன், வேலூரில் நடந்த திமுக முப்பெரும் விழாவிலும் காமெடியாகப் பேசுவதாக நினைத்துக்கொண்டு ஒரு கருத்தைத் தெரிவித்தார். அதுவும் இப்போது சர்ச்சையாகி இருக்கிறது.
‘‘திராவிடர் கழகத்தில் பெரியாரிடம் பணியாற்றினோம். பெரியார் எங்கள் ஊருக்கு (வேலூர்) வந்தார். மணியம்மையைப் பார்த்தார் கூட்டிட்டுப் போய்விட்டார். தனக்குப் பின் திக-வை நடத்த ஒரு அறிவுள்ள பெண் கிடைத்தார் என்று அவரையே திருமணம் செய்து கொண்டார். ‘இது பொருந்தா திருமணம்’ என்று அண்ணா அறிக்கை அறிக்கை வெளியிட்டு திக-விலிருந்து வெளியேறினார்; திமுக உருவானது.
வேலூரில் மணியம்மை இல்லாவிட்டால்... ஈ.வெ.ரா. அவரை திருமணம் செய்யாவிட்டால் திமுக வந்திருக்காது. எனவே, திமுக வந்ததற்கு எங்கள் மாவட்டம்தான் காரணம்’’ என்று திமுக உருவான கதையை நகைச்சுவையாக சொல்லி முடித்தார் துரைமுருகன். இளைஞரணி தம்பிகளும் திமுக உருவான வரலாற்றை அறிந்து கலகலத்தனர். ஆனால், முதல்வர் ஸ்டாலின் மட்டும் சிரிக்காமல் துரைமுருகனைப் பார்த்தார். ‘ஏங்க... இதெல்லாமா காமெடி?’ என்பதுபோல் இருந்தது அவரின் வெறித்த பார்வை!
துரைமுருகனின் இந்தப் பேச்சு திராவிடர் கழகத்தினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த துரைமுருகன், “வேலூர் பொதுக்கூட்டத்தில் பெரியார் - மணியம்மை திருமணம் குறித்து பேசும்போது பயன்படுத்திய வார்த்தைகள், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மற்றும் பெரியார் பற்றாளர்களுக்கு வருத்தம் தந்திருப்பதாக அறிகிறேன். நான் பயன்படுத்திய வார்த்தைகள் வருத்தத்தை தந்திருந்தால் அதற்காக வருந்துகிறேன். பெரியார் கொள்கைகளில் நான் எவ்வளவு பிடிப்பு உள்ளவன் என்பதை கி.வீரமணி நன்கு அறிவார்” என்று சொல்லி பிரச்சினை மேலும் வளராமல் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்!