ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் பிறந்த நாளை முன்னிட்டு அம்மாநில அமைச்சரும் நடிகையுமான ரோஜா, மாற்றுத்திறனாளி ஒருவரின் இல்லத்திற்கு சாண்டா கிளாஸ் வேடத்தில் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. வழக்கமாக அவரது பிறந்தநாளுக்கு எதாவது ஒரு நல்ல விஷயத்தை ரோஜா செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். கடந்த ஆண்டு ஒரு பெண்ணை எம்பிபிஎஸ் படிக்க வைக்க உதவினார். அவரது சொந்தத் தொகுதியான நகரியில் ஒரு கிராமத்தை தத்தெடுத்தார். அந்த வரிசையில் தான் நேற்று அவர் செய்த செயல் பலரையும் நெகிழச் செய்துள்ளது
விஜயவாடாவை சேர்ந்த மாற்றுத்திறனாளியான நாகராஜ் சாலை ஓரத்தில் செருப்புக் கடை வைத்திருக்கிறார். இரண்டு கால்களும் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியான இவருக்கு திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ளனர். மனைவி ஒரு சிறுநீரகம் செயலிழந்து படுத்த படுக்கையாய் இருக்கிறார். தங்கள் கஷ்டமெல்லாம் தீர தங்கள் வாழ்க்கையில் ஒரு மேஜிக் நடக்காத என்ற ஏக்கத்தோடு இந்தக் குடும்பத்தினர் இருந்தனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர பென்ஷனான 3 ஆயிரம் ரூபாய் தான் இவர்களின் நிரந்தர வருமானம். இந்த நிலையில், “நாகராஜ் இரண்டு பெண் பிள்ளைகளைப் படிக்க வைக்க கஷ்டப்படுவதாகவும், அவருக்கு உதவுமாறும் நடிகை ரோஜாவுக்கு அந்தப்பகுதியை சேர்ந்த எக்ஸ் பயனாளர் கோரிக்கை வைத்தனர்.
இதைப் பார்த்துவிட்டு, தனது குழுவினர் விரைவில் தொடர்பு கொள்வார்கள் என பதில் அளித்திருந்தார் ரோஜா. இந்த நிலையில் நேற்று ஜெகன்மோகன் ரெட்டியின் பிறந்த நாளை முன்னிட்டு சாண்டா கிளாஸ் வேடமணிந்து அமைச்சர் ரோஜா விஜயவாடா வாம்பே காலனியில் உள்ள நாகராஜ் வீட்டுக்கு சப்ரைஸாக சென்றார். கிறிஸ்துவரான நாகராஜ் தனது வீட்டுக்கு சாண்டா கிளாஸ் வந்ததைக் கண்டு நெகிழ்ந்துள்ளார். அதன் பிறகு தான் அவருக்கு உண்மையான ஷாக். சாண்டா கிளாஸாக வந்தது அமைச்சர் ரோஜா என்பதை தெரிந்து கொண்ட அவர் மகிழ்ச்சியில் கண்கலங்கியுள்ளார்.
நாகராஜ் குடும்பத்துடன் கேக் வெட்டி கிறிஸ்துமஸ் கொண்டாடிய ரோஜா, அவரின் பெண் குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார். அதோடு குழந்தைகளின் படிப்புக்காக 2 லட்சம் ரூபாய் காசோலையையும் வழங்கினார். ரோஜாவின் சர்ப்ரைஸ் விசிட் ஒட்டுமொத்த குடும்பத்தின் முகத்திலும் மகிழ்ச்சியை மலரச் செய்தது.
இது தொடர்பாக அமைச்சர் ரோஜா தனது எக்ஸ் தளத்தில், ‘நாகராஜ் என்ற பெயர் எனது மனதிற்கு மிகவும் நெருக்கமான பெயர். அது எனது தந்தையின் பெயர். அனைவருக்கும் நல்லது செய்ய வேண்டும். ஜெகன் அண்ணா பிறந்தநாளில் இந்த குடும்பத்திற்கு உதவியது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களின் வாழ்த்துக்கள் ஜெகன் அண்ணாவை நிச்சயம் சென்றடையும்’ என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.