திண்டுக்கல்லில் கடந்த முறை மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட ஜோதிமுத்து திமுகவிற்கு கட்சி மாறியுள்ளதும், பாஜக மாவட்ட செயலாளர் மகுடீஸ்வரன் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டது ஆகியவை திண்டுக்கல் தொகுதி பாமக வேட்பாளருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணியில் பாமக வேட்பாளராக ம.திலகபாமா போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து வெளியூர்களில் இருந்து கூட்டணிக்கட்சி தலைவர்கள் பிரச்சாரத்திற்கு வராதநிலையில், திண்டுக்கல் தொகுதியை சேர்ந்த பாஜக, பாமக நிர்வாகிகளை நம்பியே திலகபாமா தனது பிரச்சாரத்தை மேற்கொண்டுவருகிறார்.
இதில் ஒட்டன்சத்திரத்தில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் கடந்தமுறை திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த பாமக மாவட்ட செயலாளர் ஜோதிமுத்துவிற்கும், தற்போதைய வேட்பாளர் திலகபாமாவிற்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையில் ஜோதிமுத்துவின் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டது.
ஒட்டன்சத்திரம் தொகுதியில் பாமகவின் முக்கிய பிரமுகராக இருக்கும் ஜோதிமுத்து, தனது பதவி பறிக்கப்பட்டதற்கு வேட்பாளர் திலகபாமா தான் காரணம் என அவருடன் பிரச்சாரத்திற்கு செல்லாமல் இருந்தார். மேலும், இதுவரை செய்த கட்சிப்பணி, கடந்த தேர்தலில் போட்டியிட்டு ஏற்பட்ட பொருளாதார இழப்பு ஆகியவற்றை கணக்கில்கொள்ளாமல் கட்சித்தலைமை தன்னை நீக்கியதால் மனமுடைந்து திமுகவில் இணைய முடிவு செய்தார். இதனை தொடர்ந்து தேனிக்கு பிரச்சாரத்திற்கு வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஜோதிமுத்து திமுகவில் இணைந்தார். இவருடன் முன்னாள் மாநில துணைத்தலைவர் சீனிவாசன், மாவட்ட அமைப்புத்தலைவர் லைக் அலிமீரான் ஆகியோரும் திமுகவில் இணைந்தனர்.
இதுகுறித்து ஜோதிமுத்து கூறுகையில், “கட்சியில் உழைப்பவர்களுக்கு மதிப்பில்லை. மாவட்டத்திற்குள் இருப்பவர்களை கட்சித்தலைமை உதாசீனப்படுத்திவிட்டு போட்டியிட வந்தவரின் பேச்சை கேட்டு பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டனர். நாளை மாவட்டத்திற்குள் என்னைப் போன்றவர்கள் தான் கட்சி நடத்தவேண்டும். இந்த வேட்பாளர் தேர்தல் முடிந்தவுடன் சென்றுவிடுவார். அதை புரிந்துகொள்ளாமல் தவறான முடிவை கட்சித்தலைமை எடுத்தது. இதனால் திமுகவில் இணைந்தேன். பாமக நிர்வாகிகள் பலரும் திமுகவில் இணைய விருப்பம் தெரிவித்தனர். தேனி பிரச்சார கூட்டத்திற்கு அனைவரையும் அழைத்துசெல்ல அனுமதி கிடைக்கவில்லை. பாமக நிர்வாகிகள் பலரும் கட்சியில் இருந்து விலக தயாராக உள்ளனர். இந்தநிலை தொடர்ந்தால் திண்டுக்கல் மாவட்டத்தில் பாமக முற்றிலும் இல்லாதநிலைக்கு சென்றுவிடும்” என்றார்.
இதையடுத்து மேலும் ஒரு சிக்கலாக பாஜக நிர்வாகி கைது அமைந்துள்ளது. பழனி அருகே புஷ்பத்தூரை சேர்ந்தவர் மகுடீஸ்வரன். இவர், பாஜக மாவட்ட செயலாளராக பொறுப்பில் இருந்தார். மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், கூட்டணிக்கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுவிட்டது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாரில் போலீஸார் இவர்மீது வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து இவர் தலைமறைவானார். உடனடியாக பாஜக தலைமை இவரை மாவட்ட செயலாளர் மற்றும் கட்சியில் இருந்து விடுவித்தது. நேற்று இவர் கர்நாடாகவில் கைது செய்யப்பட்டார். புஷ்பத்தூர் ஊராட்சி பகுதியில் இவரை கொண்டு ஓட்டுக்கள் பெறலாம் என்ற நிலையில், இவரது கைதும் பாமக வேட்பாளருக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் பாமகவின் முக்கிய தலைவராக இருந்த ஜோதிமுத்து திமுகவில் இணைந்தது மற்றும் பாஜக மாவட்ட தலைவர் பாலியல் வழக்கு கைது ஆகியவை இப்போது திண்டுக்கள் பாஜக - பாமக கூட்டணி வேட்பாளரான திலகபாமாவுக்கு பெரும் தலைவலியாகியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
பிரபுதேவா பாட்டுக்கு நடனமாடி அசத்திய ராஜமெளலி...வைரலாகும் வீடியோ!