மக்களவையில் பகுஜன் சமாஜ் எம்.பி.யை பார்த்து பயங்கரவாதி என்று கூறிய பாஜக எம்.பி.யை இடைநீக்கம் செய்ய வேண்டும் என இந்தியா கூட்டணியை சேர்ந்த தலைவர்கள் சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
மக்களவையில் சந்திரயான்-3 திட்டம் குறித்த விவாதத்தின் போது பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி தானிஷ் அலிக்கு எதிராக தெற்கு டெல்லியின் பாஜக எம்.பி ரமேஷ் பிதுரி ஆட்சேபனைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்தார். எதிர்க்கட்சிகளின் கண்டனத்தை தொடர்ந்து ரமேஷ் பிதுரியின் கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.
ரமேஷ் பிதுரி மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், தனது மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வது குறித்து பரிசீலிப்பதாக பகுஜன் சமாஜ் கட்சி எம்பி தானிஷ் அலி கூறினார். இந்த விவகாரத்தில், விளக்கம் கேட்டு ரமேஷ் பிதுரிக்கு பாஜக தலைமை நோட்டீஸ் அனுப்பியது.
பாஜக எம்.பி. ரமேஷ் பிதுரியின் வெறுப்பு பேச்சுக்கு பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அவரை இடைநீக்கம் செய்ய வலியுறுத்தி இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அந்த வகையில் திமுக எம்.பி. கனிமொழி எழுதியுள்ள கடிதத்தில், பா.ஜ.க. எம்.பி. ரமேஷ் பிதுரி நாடாளுமன்ற கண்ணியத்திற்கும், ஜனநாயகத்திற்கும், ஒட்டுமொத்த தேசத்திற்கும் அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
ரமேஷ் பிதுரியின் பேச்சு கண்டனத்திற்குரியது என்றும், அவரை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும் கனிமொழி எம்.பி. வலியுறுத்தியுள்ளார். அதே போல் காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபருபா பொதார், தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே ஆகியோரும் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.