புதுச்சேரி - கடலூர் தடத்தில் பிஆர்டிசி பேருந்துகள் மீண்டும் இயக்கம்


புதுச்சேரி: புதுச்சேரி - கடலூர் (சோரியங்குப்பம்) இடையே நான்கு பேருந்துகள் நாளை (மே 27) முதல் மீண்டும் இயக்கப்படுகிறது. இதற்கு பயண கட்டணமாக ரூ.20 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகம்(பிஆர்டிசி) சார்பில், புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு வோல்வோ ஏசி பேருந்துகள் நான்கு இயக்கப்பட்டு வந்தது. இந்த பேருந்துகள் கரோனா காலத்தில் நிறுத்தப்பட்டன. அந்த பேருந்துகள் பல நாட்களாக பேருந்து பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனால் பேருந்துகள் பழுதாகி இயக்க முடியாமல் போனது. இந்நிலையில் இந்த பேருந்துகளுக்கு மாற்றாக தற்போது நான்கு சாதாரண புதிய பாடி கட்டிய பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி நாளை (மே 27) முதல் சாதாரண பேருந்துகள் இயக்கப்படுகிறது. புதுச்சேரி பேருந்து நிறுத்தத்தில் இருந்து இந்த பேருந்துகள் காலை 5 மணிக்கு புறப்படும். இதற்கு அடுத்து ஒவ்வொரு 30 நிமிடத்துக்கும் ஒரு பேருந்து புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி செல்லும்.

இதேபோல் கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு 30 நிமிடத்துக்கு ஒரு பேருந்து புறப்படும். இந்த பேருந்துகள் புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு 32 நடையும், கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு 32 நடையும் இயக்கப்பட இருக்கிறது. இதற்கு பயணக்கட்டணமாக ரூ.20 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மற்றும் தமிழக போக்குவரத்து துறை சம்பந்தப்பட்ட அலுவலகப் பணி நடந்து கொண்டிருப்பதால் இன்னும் 10 நாட்களில் புதுச்சேரி - திண்டிவனம் தடத்தில் இரண்டு பேருந்துகளும், புதுச்சேரி - விழுப்புரம் மார்க்கத்தில் 4 பேருந்துகளும், காரைக்கால் - மாயவரம் இடையே இரண்டு பேருந்துகளும் புதிதாக இயக்கப்பட உள்ளது என பிஆர்டிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.