சத்துணவு திட்டத்தின் வித்தகர் பி.எஸ்.ராகவன் காலமானார்!


பி.எஸ்.ராகவன்

தமிழ்நாட்டில் சத்துணவு திட்டம் வருவதற்கு முக்கிய காரணமானவரும், மத்திய அரசு பணியில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்தவருமான பி்.எஸ்.ராகவன் காலமானார்.

சத்துணவுத் திட்டம்

பூந்தமல்லியில் பிறந்த தமிழரான பி.எஸ்.ராகவன் கடந்த 1952-ம் ஆண்டு மேற்குவங்க பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வு பெற்றார். மேற்கு வங்கம் மற்றும் திரிபுரா மாநில அரசுகளில் தலைமைச் செயலர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார். கடந்த 1961-ம் ஆண்டு தேசிய ஒருமைப்பாட்டுக் குழுவில் செயலாளராக பொறுப்பேற்று, நாட்டின் பிரதமர்களான ஜவஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோருடன் இணைந்து பணியாற்றினார்.

டெல்லியில் மத்திய உணவுத்துறை கூடுதல் செயலாளராக இருந்தபோது அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரின் வேண்டுகோளை ஏற்று தமிழகத்துக்கு கூடுதல் அரிசியை ஒதுக்கினார். அந்த கூடுதல் அரிசிதான் மாணவர்களின் பசியைப்போக்க எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தை கொண்டுவர மிக முக்கிய காரணியாக இருந்தது.

எம்.ஜி.ஆர்

மத்திய அரசில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்த பி.எஸ்.ராகவன் கடந்த 1987-ம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றார். மீண்டும் சென்னைக்கு திரும்பிய அவர் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழின் ஆசிரியர் குழுவுக்கும் ஆலோசகராக பணியாற்றினார். இதுதவிர, பல்வேறு தமிழ் நாளிதழ்கள் மற்றும் பருவ இதழ்களிலும் கட்டுரைகளை எழுதியுள்ளார். ஆங்கிலத்தில் பல நூல்களையும் எழுதியுள்ள ராகவன், தமிழில் எழுதிய ‘நேரு முதல் நேற்று வரை’ என்ற நூல் மிக முக்கியமான நூலாகும்.

தனது பணிக் காலத்திலும், ஓய்வுக் காலத்திலும் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். சென்னை, அடையாறு நேருநகரில் வசித்து வந்த பி.எஸ்.ராகவன், உடல் நலக்குறைவு மற்றும் முதுமை காரணமாக தனது 97வது வயதில் நேற்று காலமானார். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் இருந்தனர். மகன் ஏற்கெனவே இறந்துவிட்டார். பி.எஸ். ராகவனின் இறுதிச்சடங்கு இன்று காலை 11.30 மணிக்கு பெசன்ட் நகர் மயானத்தில் நடைபெறுகிறது.

x