கோவையில் பரபரப்பு... திமுக முன்னாள் அமைச்சரின் மகன் வீட்டில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் சோதனை


முன்னாள் அமைச்சரின் மகன் பைந்தமிழ் பாரி வீட்டில் கர்நாடக லோக் ஆயுக்தா போலீஸார் சோதனை

முன்னாள் அமைச்சரும், திமுக சொத்து பாதுகாப்பு குழு தலைவருமான பொங்கலூர் பழனிசாமியின் மகன், பைந்தமிழ் பாரி வீட்டில் கர்நாடக மாநில லோக் ஆயுக்தா போலீஸார் சோதனை நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் அமைச்சரும், திமுகவின் சொத்து பாதுகாப்பு குழு தலைவருமாக பொறுப்பு வகித்து வரும் பொங்கலூர் பழனிசாமியின் மகன் பைந்தமிழ் பாரி. இவர் முன்னாள் மாநகராட்சி மண்டல தலைவராகவும், திமுக விளையாட்டு அணி மாநில துணைச்செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். பொங்கலூர் பழனிசாமி மற்றும் பைந்தமிழ் பாரி ஆகியோர் கர்நாடகாவில் கல்குவாரி தொழில் செய்து வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, மகன் பைந்தமிழ் பாரி

இதில் முறைகேடுகள் நடப்பதாகவும், விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்ததாகவும் எழுந்த புகாரின் பேரில் சமீபத்தில் கர்நாடக மாநில லோக் ஆயுக்தா அமைப்பு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை கர்நாடகாவில் இருந்து 2 வாகனங்களில் வந்த 15 லோக் ஆயுக்தா குழு, கோவை கிருஷ்ணா காலனியில் உள்ள பைந்தமிழ் பாரியின் வீட்டில் சோதனை நடத்தினர்.

பைந்தமிழ் பாரியின் வீட்டில் சோதனை

இந்த சோதனையின் போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் நிலையில், பெட்டி ஒன்றில் வைத்து அதனை அதிகாரிகள் காரில் எடுத்து சென்றனர். இதையடுத்து மற்றொரு குழு சோதனையை தொடர்ந்து வருகிறது. திமுகவில் அமைச்சராக பதவி வகித்து வந்த பொன்முடி இன்று நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மற்றொரு திமுக மூத்த நிர்வாகியின் மகன் வீட்டில் சோதனை நடைபெற்றுள்ளது திமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


ஜனவரி 3ம் தேதி சென்னையில் புத்தக கண்காட்சி... முதல்வர் துவங்கி வைக்கிறார்!

x