இந்தியாவில் பொறுப்பில் இருக்கும் போதே தகுதி இழப்புக்கு ஆளானவர்கள் யார், யார் தெரியுமா?


ஊழல் வழக்கு காரணமாக பதவியை இழந்தவர்கள்

தமிழகத்தின் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்த வழக்கில் தண்டிக்கப்பட்டு தனது பதவியை இழந்துள்ள நிலையில், இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள் அதிகாரத்தில் இருந்த மக்கள் பிரதிநிதிகள் ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் காரணமாக தங்களது பதவியை இழந்துள்ளனர்.

மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு 2013ம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் 5 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.60 லட்சம் அபராதமும் விதித்தது. இதனால் லாலு பிரசாத் யாதவ் மக்களவைத் தொகுதி உறுப்பினர் பதவியை இழந்தார். இதே ஊழல் வழக்கில், 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பீகார் மாநிலம் ஜகன்னாபாத் தொகுதி எம்பியான ஜெகதீஷ் சர்மாவுக்கும் பதவி பறிக்கப்பட்டது.

இதேபோல, உத்தரபிரதேசம் மாநிலம் சகாரன்பூர் மக்களவைத் தொகுதியில் இருந்து 5 முறையும், 4 முறை மாநிலங்களவை உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரசீத் மசூத், மருத்துவப் படிப்பு இட ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில், 19 செப்டம்பர் 2013 அன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தால் 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் தனது மக்களவை பதவியை இழந்தார்.

மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த பப்பு காலனி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார்.

உத்தரபிரதேசத்தின் முசாஃபர் நகரில் கடந்த 2013ம் ஆண்டு இந்துக்கள் - இஸ்லாமியர்களிடையே ஏற்பட்ட கலவரத்தில் 62 பேர் உயிரிழந்தனர். இந்த கலவரம் தொடர்பாக பாஜக எம்எல்ஏ ஆக இருந்த விக்ரம் சைனி மீது வழக்குப் பதியப்பட்டது. எம்எல்ஏ, எம்பி மீதான குற்ற வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்தது.

முசாஃபர் கலவர வழக்கில் விக்ரம் சைனி குற்றவாளி என்றும் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தும் கடந்த 2022 அக்டோபர் மாதம் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து விக்ரம் சைனியின் தொகுதி காலியாக இருப்பதாக உத்தரபிரதேச சட்டமன்றம் நவம்பர் 7, 2022 தேதியிட்ட அறிவிப்பை வெளியிட்டது

1991 முதல் 1996ம் ஆண்டு காலகட்டத்தில் முதன்முறையாக தமிழ்நாட்டின் முதல்வராக பதவி வகித்த ஜெயலலிதா, தனது ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக 66.65 கோடி ரூபாய் சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியதையடுத்து தனது முதல்வர் பதவியை இழந்தார்.

அதேபோல், அதிமுக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி கலவர வழக்கில் 3 ஆண்டு சிறைத் தண்டனை பெற்றதையடுத்து 2019ம் ஆண்டு எம்எல்ஏ பதவியை இழந்ததால் அமைச்சர் பதவியில் இருந்தும் விலகினார்.

இந்த நிலையில், 2006 – 2011 வரையிலான திமுக ஆட்சியில் உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனையடுத்து அவர் அமைச்சர் பதவியை இழந்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...


ஜனவரி 3ம் தேதி சென்னையில் புத்தக கண்காட்சி... முதல்வர் துவங்கி வைக்கிறார்!

பதற்றத்தில் திமுக... 'குற்றவாளி’ பொன்முடி... சொத்து குவிப்பு வழக்கில் இன்று காலை தண்டனை அறிவிப்பு!

x