‘பெரியதிருடன்’ பாஜக... மறைமுகமாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி!


எடப்பாடி பழனிசாமி

திண்டுக்கல்லில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் பத்திர விவகாரம் குறித்து திமுகவை சின்னதிருடன் என்றவர், பாஜகவின் பெயரை குறிப்பிடாமல் பெரியதிருடன் என விமர்சித்து பேசியது அரசியல் அரங்கில் சலசலப்பை உருவாக்கியுள்ளது.

தேர்தல் பிரச்சாரம் துவங்கியது முதல் பாஜகவை விமர்சித்து ஒருவார்த்தை கூட அதிமுக பொதுச்செயலாளர் பேசுவதில்லை எனவும், பாஜகவுடன் அதிமுக கள்ள கூட்டணி வைத்துள்ளதாகவும் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தலைவர்கள் குற்றம் சாட்டிவருகின்றனர். இதற்கு இபிஎஸ் அளித்த பதிலும் திருப்திகரமாக இல்லை என்று தெரிவித்த எதிர்க்கட்சிகள் அதிமுக, பாஜக மறைமுக உறவு வைத்துள்ளது என கூறிவருகின்றனர்.

எடப்பாடி பழனிசாமி திண்டுக்கல்

திண்டுக்கல்லில் அதிமுக கூட்டணி சார்பில் எஸ்டிபிஐ கட்சியின் வேட்பாளர் முகமது முபாரக் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து நேற்று இரவு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திண்டுக்கல்லில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, டீசல், பெட்ரோல் விலை உயர்வு குறித்து பேசியபோது கூட இதற்கு மத்திய அரசும் காரணம் என கூறாமல், மாநில அரசு டீசலுக்கு குறைப்பதாக கூறிய 4 ரூபாயை குறைக்கவில்லை. எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியம் தரவில்லை என்று தான் பேசினார். விலைவாசி உயர்வு குறித்து பேசும்போது மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பேசாமல் மாநில அரசை மட்டுமே விமர்சித்தார்.

தேர்தல் பத்திர விவகாரம் குறித்து திமுகவை கண்டித்து பேசும்போது, “தேர்தல் பத்திரம் மூலம் திமுகவிற்கு ரூ.656 கோடி கிடைத்துள்ளது. ஆனால் ஆறாயிரம் கோடி பெற்றவர்களை விட குறைவான தொகை கிடைத்துள்ளது என ஸ்டாலின் புலம்பிவருகிறார். தேர்தல் பத்திரம் குறித்து ஸ்டாலின் பேசுவது, பெரியதிருடனை பார்த்து சின்னதிருடன் பேசுவது போல் உள்ளது” என்றார்.

மோடி - ஸ்டாலின்

இவர், பெரியதிருடன் என குறிப்பிட்டது தேர்தல் பத்திரம் மூலம் அதிக நன்கொடை பெற்ற பாஜகவை குறிப்பிடுவது போல் உள்ளது. இருந்தாலும் நேரடியாக பாஜக என எடப்பாடி பழனிசாமி கட்சி பெயரை குறிப்பிடவில்லை. பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வு குறித்து பேசும்போதும் மத்திய அரசை குறைகூறவில்லை. அதேநேரம் தேர்தல் பத்திரம் குறித்து பேசும்போது மறைமுகமாக பாஜகவை பெரியதிருடன் என்றும், திமுகவை சின்னதிருடன் என்றும் பேசினார்.

இதனால் எதிர்க்கட்சிகள் சொல்வதுபோல் எடப்பாடி பழனிசாமி முழுமையாக பாஜகவை எதிர்க்க தயங்குகிறாரா அல்லது பெரியதிருடன் என குறிப்பிட்டது பேச்சுவாக்கில் வந்த வார்த்தையா என தெரியவில்லை என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

x