தென் தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட உள்ளார். இன்று காலை சென்னையில் இருந்து விமான மூலம் தூத்துக்குடி சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாக பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள், கடந்த 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் மாநிலப் பேரிடர் மீட்புக் குழு, தேசியப் பேரிடர் மீட்புக் குழு, தீயணைப்புத்துறை, காவல்துறையினர் மற்றும் அனைத்து அரசுத் துறைகளுடன் இணைந்து ஒருங்கிணைந்த முறையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்
தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், நேற்று மத்திய குழுவினர் வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்தனர். இந்த நிலையில் அதீத கனமழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய இருக்கிறார்.
இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலமாக தூத்துக்குடி சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்யவுள்ளார். இதனைத் தொடர்ந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்து அவர்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களை வழங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது.