தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு


தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 17 மற்றும் 18ம் தேதிகளில் வளிமண்டல கிழடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழக மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. தற்போது இந்த கீழடுக்கு சுழற்சி தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிக்கு நகர்ந்துள்ளது. இதனால் தமிழகத்தின் கடற்கரையோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் அதிகபட்சமாக 5 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 6 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் கடற்கரையை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதோடு, 40 முதல் 45 கிலோமீட்டர்கள் வரை சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிக்கு மீன்பிடிக்க செல்வதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

x