ஈரோடு: ஈரோடு சோலார் புறநகர் பேருந்து நிலையத்தில் பணிகள் முடிவுக்கு வராத நிலையில், அங்கு சமூக விரோத செயல்கள் நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், இருசக்கர வாகனத்தில் இளைஞர்கள் சாகசத்தில் ஈடுபடும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.
கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், திருச்சி, மதுரை, கரூர், சத்தியமங்கலம் கோபி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு, ஈரோடு நகரின் மையப் பகுதியில் உள்ள அரசு தலைமை பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிலைத் தவிர்க்க, தென்மாவட்ட பேருந்துகள் வந்து செல்லும் வகையில், சோலார் பகுதியில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இங்கு 13 ஏக்கர் பரப்பளவில் ரூ.63 கோடி மதிப்பீட்டில், புதிய பேருந்து நிலையம் அமைய, கடந்த 2022-ம் ஆண்டு கட்டுமானப் பணிகள் தொடங்கின.
90 சதவீத பணிகள் தற்போது முடிந்துள்ளன. பேருந்துகள் வந்து செல்ல விசாலமான சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வராத நிலையில், இந்த வளாகம் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை ஓட்டிப் பழகும் இடமாகவும், இரவு நேரத்தில் சமூக விரோதிகள் ஒன்று கூடும் இடமாகவும் மாறி வருகிறது. அதோடு, நீளமான சாலை இருப்பதால், இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் ஆபத்தான முறையில் சாகசங்களை அரங்கேற்றத் தொடங்கியுள்ளனர்.
பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை விரைவாக முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை, சமூக விரோதிகளால் கட்டுமானங்கள் சேதமடைவதைத் தடுக்கவும், இருசக்கர வாகன சாகசம் உள்ளிட்ட குற்றச்செயல்களைத் தடுக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.