எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய நண்பரும், தனியார் பிளானிங் நிறுவனத்தில் உரிமையாளர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை அசோக் நகர் 15வது அவன்யூவில் குருமூர்த்தி இன்ஜினியரிங் என்டர்பிரைசஸ் மற்றும் தியாகராஜன் என்டர்பிரைசஸ் பிளானிங் டிசைனிங் அன்ட் எஸ்டிமேட் என்ற தனியாருக்குச் சொந்தமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் பொதுப்பணித்துறையின் கீழ் அரசு கட்டிடங்கள் கட்டுவது மற்றும் நெடுஞ்சாலை துறையின் வாயிலாக சாலைகள் அமைப்பது உள்ளிட்ட பணிகளுக்கான திட்டங்களைத் தயாரித்து வழங்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் குருமூர்த்தி மற்றும் ஸ்ரீ தியாகராஜன் இன்ஜினியரிங் பிளானிங் என்டர்பிரைஸ் நிறுவனத்திற்கு தொடர்புடைய இடங்களில் நேற்று இரவு முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக சென்னை அசோக் நகர் 15வது அவன்யூ வில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்தில் பத்துக்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்ட சாலை அமைக்கும் பணிகள், அரசு கட்டிடங்கள் கட்டும் பணிகளில் இந்த நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட திட்டங்கள் குறித்த ஆவணங்கள் தொடர்பாக சோதனை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சோதனையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்க்கப்பட்டதற்கான சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து நிறுவன உரிமையாளர் தியாகராஜனிடம் விசாரணை நடத்தினர்.
குறிப்பாக, இந்நிறுவனத்தின் உரிமையாளர் தியாகராஜன்(55) அதிமுக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2016-ம் ஆண்டு பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது நெருங்கிய தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 7 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் இரண்டு பெட்டிகள் மற்றும் பைகளில் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்து அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.
கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்த பின்னரே இந்நிறுவனம் வரி ஏய்ப்பு, மற்றும் நிதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதா? என்பது குறித்த தகவல்கள் தெரிய வரும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.