அரசு பேருந்துகளில் வெள்ள நிவாரணப் பொருட்களை இலவசமாக அனுப்பலாம்: தமிழக அரசு


அரசு பேருந்துகளில் வெள்ள நிவாரணப் பொருட்களை இலவசமாக அனுப்பலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த 16ம் தேதி முதல் அடுத்த நாள் 17ம் தேதி வரை அதிகனமழை பெய்தது. இதனால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். குறிப்பாக, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 95 செமீட்டர் அளவுக்கு அதீத மழை பெய்தது. திருச்செந்தூரிலும் 70 செமீட்டர் மழை பெய்தது. இதனால் இரண்டு மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது, வெள்ள நீர் வடிந்து வந்தாலும் மக்கள் பாதிப்புகளில் இருந்து இன்னும் மீளவில்லை. இதனிடையே, மழை குறைந்ததால் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது. 8க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் தென் மாவட்டங்களில் மக்களை சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். நிவாரணப் பொருட்களை ஒருங்கிணைப்பதற்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

நிவாரணம் அளிக்க விரும்புவோர் அவர்களை நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் விரைவுப் பேருந்துகள் உள்பட அனைத்து அரசுப் பேருந்துகளிலும் நிவாரணப் பொருட்களை இலவசமாக அனுப்பலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

x