அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கை விசாரிக்க இடைக்கால தடை... உச்ச நீதிமன்றம் அதிரடி!


அமைச்சர் ஐ. பெரியசாமி

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான வீட்டை ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், உயர் நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றத்தின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அமைச்சராக ஐ.பெரியசாமி பதவி வகித்தார். அப்போது வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான வீட்டை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கு அவர் ஒதுக்கி இருந்தார். இதில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தது. இந்த புகார் தொடர்பாக ஐ.பெரியசாமி உள்ளிட்டவர்கள் மீது கடந்த 2012-ம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

லஞ்ச ஒழிப்புத்துறை

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் ஐ.பெரியசாமி சார்பில் எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே இந்த வழக்கில் இருந்து ஐ.பெரியசாமியை விடுவித்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கை மீண்டும் தாமாக முன்வந்து மறு விசாரணைக்கு எடுத்தார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.

அப்போது இந்த வழக்கை மீண்டும் விசாரிக்குமாறு கீழமை நீதிமன்றத்திற்கு அவர் உத்தரவிட்டிருந்தார். மேலும், வருகிற ஜூலை மாதம் 31-ம் தேதிக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் எனவும் உரிய அனுமதிகளை பெற்று மீண்டும் விசாரிக்குமாறு லஞ்ச ஒழிப்பு துறைக்கும் அவர் உத்தரவிட்டிருந்தார்.

சென்னை உயர்நீதிமன்றம்

இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணையை ரத்து செய்யக் கோரி அமைச்சர் ஐ.பெரியசாமி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஐ.பெரியசாமி சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதாடினார். “இந்த வழக்கில் ஏற்கெனவே விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டு விட்ட நிலையில் தற்போது மீண்டும் விசாரணைக்கு ஏற்றுக்கொள்வது உகந்தது அல்ல” என அவர் வாதிட்டார்.

உச்சநீதிமன்றம்

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றத்தின் விசாரணைக்கும், கீழமை நீதிமன்றத்தின் விசாரணைக்கும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். “இறுதி விசாரணை முடிவுற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு இந்த விசாரணை தொடர்பாக அடுத்த அறிவிப்பு வெளியிடப்படும்” என நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...


இன்று ஆண்டின் முதல் சூரிய கிரகணம்... என்னவெல்லாம் செய்யக்கூடாது தெரியுமா?

டக்கென காலில் விழுந்த திண்டுக்கல் சீனிவாசனின் மகன்... ஜெர்க்கான அமைச்சர் பெரியசாமி!

x