ஸ்ரீவைகுண்டம்: 3வது நாளாக ரயிலுக்குள் 500 பயணிகள் தவிப்பு; மீட்க வந்தது ஹெலிகாப்டர்கள்!


மழை வெள்ளத்தால் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் மூன்றாவது நாளாக ரயில் பயணிகள் தவிர்த்து வருகின்றனர். அவர்களை மீட்கும் பணி தாமதமாகி கொண்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாறு காணாத அளவிற்கு கனமழையை கொட்டித் தீர்த்தது. இதுவரை இல்லாத அளவில் காயல்பட்டினத்தில் 95 சென்டிமீட்டர் மழையும், திருச்செந்தூரில் 70 சென்டிமீட்டர் மழையும், சாத்தான்குளத்தில் 60 சென்டிமீட்டர் மழையும் பெய்து மக்களை பதறவைத்தது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

இதனிடையே, கடந்த 17ம் தேதி திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையம் அருகே வந்தபோது கனமழையால் நிறுத்தப்பட்டது. மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தண்டவாளம் அடித்துச்செல்லப்பட்டது. இதனால் ரயில் சேவை முற்றிலும் தடைப்பட்டது. ரயிலில் இருந்த 500 பயணிகள் செய்வதறியாது தவிர்த்தனர். இதனால் பயணிகள் உணவு, தண்ணீரின்றி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தங்களை மீட்கும் படி அவர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.

பாதிக்கப்பட்டு ரயிலுக்குள் இருக்கும் பயணிகளுக்கு அருகில் உள்ள மக்கள் உணவுகளை வழங்கியதாக தெரிகிறது. அதே நேரத்தில் ரயில் நிலையத்தில் கர்ப்பிணி பெண்கள் தவித்து வருகின்றனர். பயணிகளை மீட்கும் பணியில் ரயில்வே நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் சிக்கியவர்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர். பயணிகளை எப்படி மீட்பது என்பது குறித்து கடந்த இரண்டு நாட்களாக ரயில்வே அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றன.

நடைமுறை சிக்கல்கள் காரணமாக பயணிகளை மீட்பதில் சிரமம் ஏற்பட்டு இருப்பதாக ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர். அவர்களை மீட்பதற்காக ஹெலிகாப்டர்களும் வரவழைக்கப்பட்டுள்ளன. இன்று பயணிகள் அனைவரும் மீட்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உணவு, தண்ணீரின்றி கடந்த மூன்று நாட்களாக ரயில் உள்ளே பயணிகள் தவித்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

x