திண்டுக்கல்லில் நடந்த பாஸ்கு திருவிழாவில் பங்கேற்க வந்த திமுக அமைச்சர் ஐ.பெரியசாமியிடம், முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தனது மகனை காலில் விழுந்து ஆசிபெறச்செய்தது அரசியலையும் கடந்து நட்புடன் பழகுவதை அங்கிருந்த மக்களுக்கு எடுத்துக்காட்டியது.
திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் புனித வியாகுல அன்னை ஆலயத்தில் ஆண்டுதோறும் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு பாஸ்கு திருவிழா நடைபெறும். இந்த ஆண்டிற்கான திருவிழா தொடங்கி நடைபெற்றுவருகிறது. நேற்று விழாவின் முக்கிய நிகழ்வாக உயிர்த்த இயேசு மக்களுக்கு ஆசி வழங்கும் விதமாக பூத்தேரில் உலாவரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அமைச்சர் ஐ.பெரியசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம், அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், நத்தம் ஆர்.விசுவநாதன், எஸ்.டி.பி.ஐ., வேட்பாளர் முகமதுமுபாரக் ஆகியோர் வந்திருந்தனர். அனைவரும் ஒன்றாக ஒரே இடத்தில் அமர்ந்து கட்சி பாகுபாடின்றி பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தனது மகன் சதீஷை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு அறிமுகப்படுத்தி, ‘பெரியப்பா காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கு’ என்றார். அவரது மகன் சற்றே தயங்கி முழங்காலை தொட்டு வணங்கினார். நன்றாக காலில் விழு என முன்னாள் அமைச்சர் கூறியதையடுத்து மீண்டும் அமைச்சர் ஐ.பெரியசாமியின் காலை தொட்டு ஆசிபெற்றார்.
அருகிலிருந்த திமுக மாவட்ட செயலாளரும் ஐ.பெரியசாமியின் மகனுமான ஐ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ.,வை இது அண்ணன் என்றும், அருகில் இருந்து மேயர் இளமதியை அக்கா என்றும் தனது மகனுக்கு அறிமுகப்படுத்திவைத்தார். “இவனுக்கு தான் சீட் வாங்கலாம் என்று இருந்தோம், அதற்குள் கூட்டணிக்கட்சிக்கு ஒதுக்கிவிட்டனர்” என அமைச்சர் ஐ.பெரியசாமியிடம், முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசிக்கொண்டிருந்தார்.
நத்தம் ஆர்.விசுவநாதனும் அமைச்சர் ஐ.பெரியசாமியும் கைகொடுத்து கொண்டனர். திருவிழாவிற்கு வந்திருந்த திமுக, அதிமுக கட்சிகளின் முக்கியபிரமுகர்கள் ஒன்றாக அமர்ந்து கட்சி பாகுபாடின்றி பேசிக்கொண்டிருந்தது விழாவிற்கு வந்திருந்த பொதுமக்களை கவர்ந்தது.