வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை: மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்


கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஸ்ரீமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட சேமுண்டி கிராமத்தில் இடும்பன் என்பவர் வசித்து வருகிறார். நேற்று இவரது வீட்டுக்குள் சிறுத்தை ஒன்று புகுந்தது. வீட்டுக்கு சென்ற இடும்பன் உறுமல் சப்தம் கேட்டதும் அச்சமடைந்து பார்த்தபோது, வீட்டுக்குள் சிறுத்தை புகுந்து இருப்பதைக் கண்டறிந்தார்.

உடனே வீட்டை பூட்டிவிட்டு வெளியே வந்த அவர், இதுகுறித்து வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். வீட்டில் சிறைப்பட்ட சிறுத்தையைக் காண கிராம மக்கள் திரண்டனர்.

இதுகுறித்து இடும்பன் கூறும்போது, “நான் தேயிலைத் தோட்டத்தில் பணிபுரிந்துவிட்டு, வீட்டுக்குச் சென்றேன் அப்போது உறுமல் சப்தம் கேட்டது. என்னவென்று பார்த்தபோது, உள்ளே சிறுத்தை இருந்தது. நான் வெளியே ஓடி வந்து, கதவைப் பூட்டிவிட்டு, அக்கம்பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தேன்” என்றார்.

உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பிடிக்க வனத் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். சிறுத்தைக்கு உடுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷ் குமார் மயக்க ஊசி செலுத்தி பிடித்தார். சிறுத்தையை வனத்துறையினர் முதுமலை வனப்பகுதியில் விட முடிவு செய்துள்ளனர்.

x