150 ஆண்டுகளுக்கு பிறகு... தூத்துக்குடி மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த பெருமழை!


150 ஆண்டுகளுக்கு பிறகு தூத்துக்குடி மாவட்டத்தில் கொட்டித்தீர்த்துள்ள பெருமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 93.2 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை, நேற்று இரவு வரை இடைவிடாது பெய்து கொண்டே இருந்தது.

வீடுகளுக்குள் மழைநீர்: திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சேவியர் காலனி, டவுன் வ.உ.சி. தெரு,பாரதியார் தெருவில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். திருநெல்வேலி ஹைகிரவுண்ட் பகுதியில் உள்ள அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தண்ணீர் புகுந்ததால் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்குகிறது. தாமிரபரணி ஆற்றில் 40 ஆயிரம் கனஅடி நீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் ஆற்று வெள்ளம் ஊருக்குள் புகுந்து எங்கு பார்த்தாலும் வெள்ளமாக ஊருக்குள் புகுந்து எங்கு பார்த்தாலும் வெள்ளமாக காட்சியளிக்கின்றன. சாலைகள், தெருக்களில் ஆற்றில் வெள்ளம் ஓடுவதுபோல் ஓடுகிறது.

மணிமுத்தாறு, குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து நேற்று மாலை விநாடிக்கு 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்கள் அனைத்தும் முடங்கின. நாகர்கோவில் மீனாட்சி கார்டன், வடசேரி புளியடி, பாரைக்கால் மடம் பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்த நிலையில், தீயணைப்பு துறையினர் ரப்பர் படகு மூலம் மக்களை மீட்டனர். அஞ்சுகிராமம், செட்டிகுளம் பகுதிகளில் சாலைகள் ஆறுபோல காட்சியளித்தன. இதனால் அப்பகுதியிலும், திருவனந்தபுரம் சாலையிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. கன்னியாகுமரியில் படகு சேவை ரத்து செய்யப்பட்டது. பழையாற்றில் கடும்வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால்,கரையோர மக்கள் வெளியேற்றப்பட்டனர். பாதுகாப்பு கருதி திற்பரப்பு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

தூத்துக்குடி மாவட்டத்திலும் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் காயல்பட்டினத்தில் 93.2 சென்டிமீட்டர், திருச்செந்தூரில் 67 சென்டிமீட்டர், ஸ்ரீவைகுண்டத்தில் 62 செமீ, கோயில்பட்டியில் 49.5 சென்டிமீட்டர், சாத்தான்குளத்தில் 46.6 சென்டிமீட்டர், தூத்துக்குடியில் 36.1 சென்டிமீட்டர், ஒட்டப்பிடாரத்தில் 35.6 செமீ, கடம்பூரில் 34.8 செமீ, குலசேகரப்பட்டினத்தில் 32.6 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. 150 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவது அம்மாவட்ட மக்களை பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.

திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டியில் அதிகபட்சமாக 59.7 செ.மீ. மழையும், அம்பாசமுத்திரத்தில் 41.6 செ.மீ. மழையும் பெய்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

x