அந்த காட்சியைப் பார்த்த தொண்டர்களின் கண்களில் நீர் கசிந்தது. கம்பீரமாக தனியொரு சிங்கமாக கர்ஜித்த நடிகர் விஜயகாந்த் சக்கரநாற்காலியில் ஒரு குழந்தையைப் போல அழைத்து வரப்பட்டதைப் பார்த்த தொண்டர்கள் அதிர்ச்சியில் உறைந்தார்கள். இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், “கேப்டனை இப்படியெல்லாம் கஷ்டப்படுத்த வேண்டாம்” எனப் பதிவிட்டிருந்த இயக்குநர் பாண்டிராஜுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடுமையாக பதில் அளித்துள்ளார்.
சென்னை திருவேற்காட்டில், தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கடந்த வாரம் நடைபெற்ற நிலையில், சமீபத்தில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய தேமுதிக தலைவர், நடிகர் விஜயகாந்த் இந்தக் கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
மிகவும் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் இந்தக் கூட்டத்தில் சரிந்து விழப்போன நிலையில், அவரை தேமுதிக தொண்டர்கள் தாங்கிப் பிடித்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இந்நிலையில் இந்த வீடியோவைப் பார்த்து மனம் வருந்திய இயக்குநர் பாண்டிராஜ், “கேப்டன் விஜய்காந்த் அவர்களுக்கு இப்பொழுது சரியான ஓய்வு தேவை. அவர் பூரண குணமடையும்வரை அவரை இப்படியெல்லாம் கஷ்டப்படுத்தாதீர்கள் ப்ளீஸ். பிடித்த ஒரு ‘நல்ல மனிதரை ‘ இப்படி பார்க்க ரொம்பவே கஷ்டமா இருக்கு” என இயக்குநர் பாண்டிராஜ் பதிவிட்டிருந்தார்.
இதனை விஜயகாந்த் மீதுள்ள அக்கரையாக எடுத்துக் கொள்ளாமல் கடுப்பாகி உள்ளார் பிரேமலதா. தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அவர், பாண்டிராஜ் மீது கோபத்துடன் பதில் அளித்துள்ளார். மிஸ்டர் பாண்டிராஜிடம் நான் கேட்டுக் கொள்கிறேன். ஏதோ ஒரு பதிவு போடணும் என்பதற்காக பதிவிடாதீர்கள். இது சினிமா கிடையாது, கட்சி. எங்களுக்குத் தெரியும் அவரை எப்படி பாத்துக்கணும் என்று. உங்க அறிவுரைக்கும், இலவச அட்வைஸூக்கும் நன்றி மிஸ்டர் பாண்டிராஜ்” எனப் பேசியுள்ளார்.
இதற்கு நெட்டிசன்கள் பலரும் கடுமையாக எதிர்வினை ஆற்றி வருகிறார்கள்.