வெள்ளக்காடாக மாறிய கன்னியாகுமரி; தண்ணீரில் மிதக்கும் தென் தமிழகம்!


கன்னியாகுமரியில் பெய்து வரும் தொடர் மழையால் வீடுகளை சூழ்ந்த வெள்ளம்

தென் தமிழ்நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக, திருநெல்வேலி, கன்னியாகுமாரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை நீர் வீடுகளை சூழ்ந்து மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. ஊட்டுவாழ் மடம் பகுதியில் வீடுகளை மழைநீர் சூழ்ந்ததால் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். மையிலாடி-அஞ்சுகிராமம் சாலை, கோழிகோட்டு பொத்தை-தோவாளை சாலை, இறச்சகுளம்-திட்டுவிளை சாலைகளில் மழை வெள்ளம் ஆறு போல் ஓடுகிறது. இதனால் அந்த சாலைகள் வழியே போக்குவரத்து முடங்கியுள்ளதோடு, வாகன ஓட்டிகள் மாற்று பாதையில் சென்று வருகின்றனர்.

தீயணைப்புத்துறையினர் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டனர்

நாகர்கோவிலில் கனமழை பெய்துவரும் நிலையில் ஊட்டுவாழ்மடம், பாறைக்கால்மடம் பகுதிகளில் முழங்கால் அளவுக்கு தேங்கிய மழை நீர் காரணமாக வீட்டில் சிக்கிய பொதுமக்களை தீயணைப்புத்துறையினர் ரப்பர் குழாய்கள் உதவியுடன் மீட்டு வருகின்றனர். மேலும் பாதுகாப்பு கருதி அங்கு மின்சாரமும் நிறுத்தப்பட்டுள்ளதால், மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

பல இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் நிறுத்தம்

இதே போல் தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் கனமழையால், குற்றாலம் அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அபாய அளவை தாண்டியும் வெள்ளம் பாய்ந்தோடி வருவதால், அருவியின் அருகே சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பழைய குற்றாலத்திலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிப்பதால் வாகன ஓட்டிகள் அவதி

நெல்லை மாவட்டம் பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு விநாடிக்கு 30,000 கன அடி வரை அதிகரிக்கப்பட உள்ளதால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. மேலும் நீர் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

x