வத்தலகுண்டு: வத்தலகுண்டு பகுதியில் பெய்த கனமழையால் 15 வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன. இரு சக்கர வாகனங்கள் மற்றும் மாடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு சூறாவளியுடன் சுமார் 2 மணி நேரம் பெய்த கனமழையால், வத்தலகுண்டு நகரச் சாலைகளின் இருபுறமும் உள்ள கழிவுநீர் கால்வாயில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி சாலைகளிலும் வழிந்தோடியது.
வத்தலகுண்டு காந்தி நகர் பகுதியில் உள்ள முனியாண்டி கோயில் ஓடையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஓடையின் கரையில் இருந்த குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளநீர் புகுந்தது. இதனால் கரையோரங்களில் இருந்த 15-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமடைந்தன.
மஞ்சள் ஆற்று படித்துறை குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த வெள்ளநீர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 இரு சக்கர வாகனங்களையும் அடித்துச் சென்றது. ஓடையில் ஏற்பட்ட வெள்ளத்தில் காந்திநகர் - காமராஜபுரம் இணைப்பு சாலை துண்டிக்கப்பட்டது. பசுமாடு மற்றும் கன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. வத்தலக்குண்டு தீயணைப்பு வீரர்கள் வீடுகளில் சிக்கிக் கொண்டவர்களை மீட்டனர்.
வத்தலகுண்டு பேரூராட்சி தலைவர் சிதம்பரம், நிலக்கோட்டை வட்டாட்சியர் தனுஷ்கோடி ஆகியோர் சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டனர். வீடுகளை இழந்தவர்கள் சமுதாயக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
வத்தலகுண்டு சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பெய்த கனமழையால், கோட்டைப்பட்டி, கீழ கோவில்பட்டி ஆகிய கிராமங் களுக்குள்ளும் வெள்ளநீர் புகுந்தது.