மழை வெள்ள பாதிப்பு; ஆக்‌ஷன் எடுத்த அரசு... அசந்து படுத்துவிட்ட ஆளும்கட்சி!


சென்னை மழை பாதிப்பு

மழை, வெள்ளத்தை தமிழக அரசு கையாண்ட விதம் சரியில்லை என இங்கே இருப்பவர்கள் வாரி தூற்றிக் கொண்டிருக்க, வெள்ள பாதிப்புகளை மதிப்பிட மத்திய அரசால் அனுப்பி வைக்கப்பட்ட மத்திய குழுவினர் தமிழக அரசு வெள்ள பாதிப்புகளை கையாண்ட விதத்தை பாராட்டியுள்ளது. அதேபோல், புயல்,மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது அக்குழு.

தேங்கிய நீர்

“2015-ம் ஆண்டுக்குப் பிறகு தமிழக அரசு மழை வெள்ளத்தை சமாளிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை சிறப்பான முறையில் செய்துள்ளது. மாநில அரசு எடுத்திருக்கும் முயற்சிகள் மிகவும் திருப்தியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. பாதிப்புகளில் இருந்து மக்கள் மீள மாநில அரசின் முயற்சிக்கு பாராட்டுக்கள்” என்பது தான் மத்திய குழுவினர் தமிழக அரசுக்கு வழங்கி இருக்கும் நற்சான்றிதழ்.

மத்திய அரசின் அதிகாரிகளே பாராட்டும் வகையில் மாநில அரசும், முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்களும், அதிகாரிகளும் சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறார்கள். ஆனால், மக்களாலும் மாற்றுக் கட்சியினராலும் இந்த மழை வெள்ளத்தை கையாள்வதில் தமிழக அரசு மெத்தனமாக இருந்துவிட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது. சமூக வலைதளங்களில் பகடிக்கும் பரிகாசத்துக்கும் உள்ளாகியிருக்கிறது தமிழக அரசு.

உண்மையைச் சொல்லப்போனால், மிக்ஜாம் புயல் மழையை மிகச்சிறப்பாகவே திமுக அரசு கையாண்டிருக்கிறது. ஆனால், அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும், சென்னையின் புறநகர் பகுதிகளிலும், மற்ற மூன்று மாவட்டங்களிலும் மழை நாளிலும், மறுதினங்களிலும் மக்களோடு நிற்க திமுகவினர் தவறிவிட்டதும்தான் மக்களின் கோபத்துக்கு காரணமாகி இருக்கிறது.

படகுகள் மூலம் மீட்புப்பணி

“சென்னையில் 4 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் மழை நீர் வடிகால் பணிகள் நடந்து முடிவடைந்துவிட்டது. எனவே, 20 செ.மீ மழை பெய்தாலும் ஒரு சொட்டுக்கூட தண்ணீர் தேங்காது. அப்படியே தேங்கினாலும் 2 மணி நேரத்தில் வடிந்துவிடும்” என்று அமைச்சர்கள் நேரு, மா.சுப்ரமணியன், சேகர்பாபு உள்ளிட்டவர்கள் மழைக்கு முன்பாக ஆணித்தரமாகச் சொல்லி இருந்தார்கள்.

ஆனால் அவர்களின் அதீத நம்பிக்கையை பொய்யாக்கியது பேய்மழை. டிசம்பர் 4-ம் தேதி புயல் சென்னை வழியாக கடந்தபோது 24 மணி நேரத்தில் 40 செ.மீ மழை பதிவானது. இதில் சென்னையில் அதிகபட்சமாக பெருங்குடியில் 45 செ.மீ மழை பதிவானது. இதனால் சென்னை நகரமே வெள்ளக்காடாக மாறிப்போனது. எதுவும் கட்டுக்குள் இல்லை. அதனால் எங்கெங்கும் தண்ணீர் தேங்கியது. யாராலும் எதுவும் செய்ய முடியாத நிலை உருவானது.

ஆனாலும் அரசாங்கம் தேவையான பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கியது. புயலால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க 23 ஆயிரத்துக்கும் அதிகமான பணியாளர்களுடன் 900 மின் மோட்டர்கள், 250 படகுகளும் தயார் நிலையில் இருந்தன. மாந­கர போக்­கு­வ­ரத்­துக் கழ­கத்­தில் 600 பேர் அன்றைய தினம் பணியில் இருந்தனர். கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு அதிகாரிகள், அமைச்சர்கள் நிலைமையைக் கண்காணித்தனர். முதல்வரே நேரடியாக அங்கு சென்று பணிகளை விரைவுபடுத்தினார். தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டன.

கடும் மழை பெய்துகொண்டிருந்த நேரத்திலும் அமைச்சர்கள் உதயநிதி, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்டவர்கள் களத்தில் சுற்றிக்கொண்டிருந்தார்கள். தலைமைச்செயலாளர் ஷிவதாஸ் மீனா, மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் பம்பரம்போல் சுற்றிவந்து பணிகளை கவனித்தார்கள்.

களத்தில் மா.சுப்ரமணியன்

ஆனாலும் நிலைமை கைமீறிப் போனது. மழையால் பாதிப்பு ஏற்படாது என்று அரசாங்கம் சொல்லியிருந்ததை நம்பி மக்கள் தங்கள் வீடுகளில் இருந்தார்கள். ஆனால், அதிகபட்ச மழை காரணமாக வேளச்சேரி, முடிச்சூர், ஈஞ்சம்பாக்கம், பள்ளிக்கரணை, மேற்கு தாம்பரம் போன்ற சென்னையின் புறநகர் பகுதிகளில் ஆள் மட்டத்துக்கு மழை நீர் தேங்கியது. மீட்புக் குழுவினர் தயாராக இருப்பதாக அரசாங்கம் சொல்லியிருந்ததால் அவர்கள் தங்களை மீட்க வருவார்கள் என மக்கள் காத்திருந்தனர். ஆனால், சென்னையின் மையப் பகுதிகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்றுவதிலேயே அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களின் கவனம் முழுமையாக இருந்தது. அதனால் புறநகர் பகுதிகளை அவர்களால் திரும்பிக்கூட பார்க்க முடியவில்லை.

2 நாட்களை கடந்தும்கூட மீட்பு குழுவினர் யாரும் அங்கு வரவில்லை. மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட ஆளும் கட்சியினரோ அதிகாரிகளோ அங்கு வந்திருந்து சென்னையின் நிலையை எடுத்துச் சொல்லி தங்களால் இயன்றதைச் செய்து மக்களோடு நின்றிருந்தால் அவர்கள் கோபப்பட்டிருக்க மாட்டார்கள். இரண்டு மூன்று நாட்களாகியும் தண்ணீர், பால், உணவு இன்றி தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட நிலையில் தங்களை காக்கவோ பார்க்கவோ யாரும் வரவில்லை என்பதுதான் அவர்களின் கோபத்துக்கு காரணமாகிப்போனது.

இதைத் தாமதமாகப் புரிந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின், உள்ளுர் நிர்வாகிகள் அனைவரும் நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று உத்தரவிட்டார். இதையடுத்தே எம்எல்ஏ-க்கள் உள்ளிட்டவர்கள் பாதிப்பு பகுதிகளுக்கு படையெடுத்தார்கள். அங்கே மக்கள் அவர்களை வரவேற்ற விதம் வேறுவிதமாக இருந்தது. இரண்டு மூன்று நாட்களாக தேக்கிவைத்திருந்த கோபத்தை எல்லாம் வெளிப்படுத்தினார்கள். நேரடியாகவே மறித்து கேள்வி கேட்டார்கள். நிவாரணப் பொருட்களைக்கூட தூக்கி எறிந்தார்கள்.

நிலைமை சரியில்லை என்பதை உணர்ந்த திமுக தலைமை உடனடியாக பால், உணவு உள்ளிட்டவற்றை இலவசமாக வழங்கியும், படகுகள் மூலம் மக்களை மீட்கவும் நடவடிக்கை எடுத்தது. தண்ணீரை வெளியேற்ற புயல்வேகத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறாயிரம் ரூபாய் நிவாரணம் என்ற அறிவிப்பும் வெளியானது. அப்புறம் தான் நிலைமை கொஞ்சம் சீரானது.

கனிமொழி என்.வி.என்.சோமு

மழை வெள்ளத்தை திமுக கையாண்ட விதம் குறித்து எம்பி-யும் திமுக செய்தித் தொடர்பாளருமான டாக்டர் கனிமொழி என்.வி.என்.சோமுவிடம் பேசினோம்.

“திமுகவின் கட்டமைப்பு என்பது அடிமட்டத் தொண்டர்கள் தான். அவர்கள் இல்லாமல் எந்தப் பொறுப்பாளரும் களத்துக்குச் செல்ல முடியாது. அமைச்சர்களும் எம்பி-க்கள் உள்ளிட்டவர்களும் மழையின்போது களத்தில் இருந்ததை அனைவருமே ஒப்புக்கொண்டார்கள். கீழ்மட்ட மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் அவர்கள் எப்படிச் சென்றிருப்பார்களா? அவர்களும் அங்கேதான் இருந்தார்கள். ஆனால், தொலைதொடர்பு துண்டிக்கப்பட்டதால் பலரையும் தொடர்புகொள்ள முடியவில்லை. அதற்காக அவர்கள் அங்கே இல்லை என்று சொல்வது பெரும் தவறு.

எதிர்பாராத இயற்கை பேரிடர் நடந்துவிட்டது. இருப்பினும் உடனடியாக சுதாரித்துக்கொண்டு அரசாங்கமும், திமுகவும் அதனை எதிர்கொண்டு நிலைமையை முற்றிலுமாக சரிசெய்திருக்கிறது. இதை மத்தியக் குழுவினரே ஒப்புக்கொண்டு பாராட்டியிருக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் எதை வேண்டுமானாலும் சொல்லிவிட்டுப் போகட்டும். அதைப்பற்றி கவலையில்லை. அப்படிக் குறைசொல்லும் அவர்களில் யாராவது களத்தில் இருந்தார்களா என்பதை மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். 2015 மழை வெள்ளத்திலும் சரி, இப்போதும் சரி திமுக மக்களோடுதான் நிற்கிறது” என்றார் அவர்.

வரலாறு காணாத அளவுக்கு ஏற்பட்ட பெரும் பாதிப்பை அரசாங்கம் தன்னால் இயன்றவரை சரியாகவே செயல்பட்டு நிலைமையைச் சமாளித்திருக்கிறது. ஆனால், அரசாங்கத்துடன் களத்தில் நிற்க வேண்டிய ஆளும்கட்சியினர் தான் தங்களது பொறுப்பை உணராமல் இருந்துவிட்டார்கள். எம்பி-யான கனிமொழி சோமு உள்ளிட்டவர்கள் இதை மறுத்தாலும் இதுதான் கள யதார்த்தம்!

x