மகளிர் உரிமைத்தொகை ஏன் கிடைக்கவில்லை... இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்!


மகளிர் உரிமைத்தொகை

மகளிர் உரிமைத்தொகை தனக்கு எதனால் கிடைக்கவில்லை என்பதை புதிய இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தி.மு.க. அரசு தனது தேர்தல் அறிக்கையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று அறிவித்தது. இந்த திட்டம் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான கடந்த 15ம் தேதி காஞ்சிபுரத்தில் முதல்வர் ஸ்டாலினால் தொடங்கிவைத்தார். மகளிருக்கு ரூ.1,000 உதவித்தொகைக்கான ஆணை மற்றும் அதற்கான பிரத்யேக ஏ.டி.எம். கார்டுகளை வழங்கினார். தமிழகம் முழுவதும் 1 கோடியே 6 லட்சம் பேருக்கு இந்த மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது. அதாவது விண்ணப்பித்தவர்களில் 65 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. 35 சதவீத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளன.

எனவே தகுதி இருந்தும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டால் அவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையே மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது ஏன்? என்பதை தெரிந்து கொள்ளும் வகையில் https://kmut.tn.gov.in என்ற புதிய இணையதளம் ஒன்றை தமிழக அரசு தொடங்கி உள்ளது.

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், "அரசு உருவாக்கி உள்ள இந்த புதிய இணையதளம் மூலம் மகளிர் உரிமைத்தொகை தனக்கு எதனால் கிடைக்கவில்லை என்பதை தாங்களாகவே தெரிந்து கொள்ளலாம். அதாவது அந்த இணையதளத்தில் ஆதார் எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும். அதில் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பத்தில் கொடுத்த ஆதார் எண்ணை பதிவிட வேண்டும். ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு ஓடிபி வரும். அதை வைத்து என்ன காரணத்துக்காக பணம் வரவில்லை என்பதை பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம்" என்றனர்.

x