மதுரை `மூலிகை ஆசிரியை' சுபஸ்ரீக்கு `மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் பாராட்டு


மதுரை: மதுரை மாவட்டம் வரிச்சியூர்அருகேயுள்ள நாட்டார்மங்கலத்தைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ. மருத்துவ மூலிகைகள் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், வரிச்சியூர்அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறார். மேலும், 40 சென்ட்இடத்தில் மூலிகைத் தோட்டம் அமைத்து, அதில் 500-க்கும்மேற்பட்ட அரிய வகை மூலிகைகளை வளர்த்து வருகிறார்.

இங்குள்ள ஒவ்வொரு மூலிகைச் செடியையும் துல்லியமாகத் தெரிந்து கொள்வதற்காக அவற்றின் பெயர்களையும் ஆவணப்படுத்தியுள்ளார். கரோனா காலத்தில் தொற்று பாதித்தோருக்கு மூலிகை மருந்து கொடுத்து குணப்படுத்தியுள்ளார். ஆராய்ச்சி மாணவர்கள், பேராசிரியர்கள், மூலிகை ஆர்வலர்கள் என சுபஸ்ரீயை தேடி தினமும் பலரும் வந்து கொண்டிருக்கும் நிலையில், அவரது முயற்சியை அறிந்த பிரதமர் மோடி நேற்று‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில், அவரை குறிப்பிட்டுப் பாராட்டினார்.

இதுகுறித்து ஆசிரியை சுபஸ்ரீ கூறியதாவது: என் தந்தையை 1980-ல் பாம்பு கடித்தது. மூலிகை மருந்து கொடுத்து, அவரது உயிரைக் காப்பாற்றினேன். அப்போதிலிருந்து மூலிகைகள் மீதுஆர்வம் அதிகரித்தது. பாரம்பரிய மூலிகைச் செடிகளை வீட்டில் வளர்க்கத் தொடங்கினேன். பின்னர், பள்ளியில் மூலிகைச் செடிகளை வளர்க்கத் தொடங்கினேன். கரோனா காலத்தில், எனது வீட்டில்இருந்த மூலிகைச் செடிகளை பொதுமக்களுக்குக் கொடுத்து உதவினேன்.

தொடர்ந்து, வரிச்சியூர் அருகில் உள்ள நாட்டார்மங்கலத்தில் 40 சென்ட் நிலத்தில் மூலிகைத் தோட்டத்தை 2021-ல் அமைத்தேன். இந்த முயற்சிக்கு கணவர் பாபு பெரிதும் உதவினார். பாசனத்துக்காக தனி ஆழ்குழாய்க் கிணறு, செடிகளைப்பாதுகாக்க இரும்பு வேலி, பார்வையாளர்களுக்கு வசதியுடன்கூடிய குடிசை உள்ளிட்டவற்றுடன் அந்த நிலத்தை மூலிகை சரணா லயமாக மாற்றினோம்.

கருமஞ்சள் (குர்குமா சீசியா), பேய்கரும்பு (டிரிபிடியம் அருண்டினேசியம்), கருடகல் சஞ்சீவி(செலகினெல்லா இன்க்ரெசென்டிஃபோலியா ஸ்பிரி ங்), கருநெச்சி (வைடெக்ஸ் நெகுண்டோ பிளாக்), பூனை மீசை (ஆர்த்தோசிஃபோன்) போன்ற அரிய வகை இனங்கள் உட்பட 500-க்கும்மேற்பட்ட மூலிகைச் செடிகள் என் தோட்டத்தில் உள்ளன. தற்போது, ​​எனது மூலிகைத் தோட்டம் கல்லூரி மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தோட்ட ஆர்வலர்களுக்கான ஆதார மையமாகத் திகழ்கிறது. மருத்துவத் தாவரங்களின் மதிப்பு மற்றும் பாதுகாப்பின் அவசியம் குறித்து மக்களுக்கு விளக்க,பயிற்சி மற்றும் விழிப்புணர்வு அமர்வுகளும் நடைபெறுகின்றன. என்னை பிரதமர் பாராட்டியது நெகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு சுபஸ்ரீ கூறினார்

x