மக்கள் - மருத்துவர்கள் நல்லுறவை மேம்படுத்த தன்னார்வ அமைப்பு தொடக்கம்!


சென்னை: குரோம்பேட்டையில் மக்களுடன் மருத்துவர்கள் நல்லுறவை மேம்படுத்த உதவும் நோக்கில், தன்னார்வ அமைப்பு (டாக்டர் சிட்டிசன் ஃபோரம்) தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

இதில் இந்திய மருத்துவச் சங்கம் தமிழ்நாடு கிளை தலைவர் கே.எம்.அப்துல் ஹசன் தன்னார்வ அமைப்பைத் தொடக்கி வைத்து பேசும்போது, “மக்களின் உடல் நலன் மற்றும் உயிர் காக்கும் மருத்துவப் பணியில் ஈடுபட்டுவரும் மருத்துவர்கள், பல்வேறு பிரச்சினைகள், சவால்களை எதிர்கொண்டு மக்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டில் ஆரோக்கியமான கட்டமைப்பை உருவாக்க உழைத்து வரும் மருத்துவர்கள், மக்களுடன் நல்ல புரிந்துணர்வு மற்றும் நல்லுறவை மேம்படுத்த உதவும் பாலமாக மக்கள் மருத்துவர் தன்னார்வ அமைப்பு திகழும்” என்றார்.

குரோம்பேட்டை மூத்த சமூக ஆர்வலரும், அமைப்பின் துணைத் தலைவருமான சந்தானம் பேசுகையில், “மக்கள் மனித தெய்வமாக மருத்துவர்களுக்கு மரியாதை கொடுத்த காலம் மாறிப் போய் இப்போது மருத்துவர்களுக்கும் மக்களுக்கும் நடுவில் இடைவெளி அதிகரித்துள்ளது. நாடெங்கும் அதிகரித்துள்ள மருத்துவ வணிகக் கலாச்சார வளர்ச்சி, முன்பு இருந்த குடும்ப மருத்துவர் என்ற நல்லெண்ண நம்பிக்கை, உறவைச் சிதைத்து விட்டது. மருத்துவர்‌ மக்கள் அமைப்பு இருதரப்பினருக்கும் இடையில் பரஸ்பர புரிந்துணர்வை உருவாக்க பேருதவி புரியும்” என்றார்.

மருத்துவர் மக்கள் அமைப்பின் தலைவர் ஜி.ராகவலு பேசுகையில், “தாம்பரம் மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் தன்னார்வ மருத்துவத் தொண்டு நோக்குடன் இலவசமாக மருத்துவச் சேவை வழங்க முன்வந்துள்ளனர். தாம்பரம் இந்திய மருத்துவர் சங்கத்தில் மருத்துவ முகாம்கள் நடத்த உள்ளோம். தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளி, திருமண மண்டபம் உள்ளிட்டவற்றில் இலவச மருத்துவ முகாம்கள் தொடர்ந்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளது” என்றார்

நிகழ்வில் தாம்பரம் மருத்துவச் சங்கம் முன்னாள் தலைவர் எல்.பாலசுப்ரமணியன், தாம்பரம் மருத்துவச் சங்க நிர்வாகிகள் எஸ்.சரவணகுமார்,கே.சந்தேஷ், பிரசாந்த் பாண்டியன் மற்றும் மருத்துவர்கள் ரவிசங்கர், முத்துக் குமார், வழக்கறிஞர் ராமதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

x