சென்னை: தமிழகத்தில் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு பிரிவை தொடங்க வேண்டும் என ஓய்வுபெற்ற நிர்வாக அலுவலர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்ட சங்கத்தின் அறிக்கையில் கூறியிருப்பதாவது: “முதியோர் நல மருத்துவ நிபுணர்களை கொண்டு தேசிய முதியோர் நல மருத்துவ மையம், சென்னை கிண்டியில் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. சென்னை மாநகரத்தின் தென் பகுதியில் உள்ள மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இம்மருத்துவமனை ஒரு வரப்பிரசாதமாகும். அதேநேரம் சென்னையின் கிழக்கு, மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் குடியிருக்கும் மூத்த குடிமக்கள் இந்த மருத்துவமனைக்கு வருவதற்கு பெரும் சிரமப்பட வேண்டிய நிலை இருக்கிறது.
இதையொட்டி சென்னை புறநகரில் உள்ள பெரிபெரியல் மருத்துவமனைகள், ஸ்டான்லி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை போன்றவைகளிலும் மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு சிறப்பு நிபுணர்களை கொண்டு சிறப்பு சிகிச்சை அளிக்க தனி பிரிவுகளை உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல மூத்த குடிமக்கள் பலர் தங்களது தேவைகளை தாங்களே பூர்த்தி செய்துகொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.
எனவே அவர்களது நலனை கருத்தில் கொண்டு டெல்லியில் காவல்துறையால் தொடங்கப்பட்ட, ‘மூத்த குடிமக்கள் பாதுகாப்பு பிரிவை’ சென்னை மற்றும் தமிழகத்தின் இதர மாவட்ட தலைநகரங்களில் தொடங்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மூத்த குடிமக்களின் நன்மைக்காக இந்த கோரிக்கைகளை பரிசீலித்து, அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது