திருநெல்வேலி மரக்கடையில் பயங்கர தீ விபத்து: 15 மணி நேரம் போராடி அணைத்த தீயணைப்பு வீரர்கள்


திருநெல்வேலி: திருநெல்வேலி பேட்டையில் உள்ள மரக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 15 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீ அணைக்கப்பட்டது. இதில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மரங்கள், பொருட்கள் எரிந்து சாம்பலானதாக கூறப்படுகிறது.

திருநெல்வேலி, பேட்டை, செந்தமிழ் நகரைச் சேர்ந்தவர் மைதீன் பிச்சை (45). இவருக்கு சொந்தமான மரக்கடை மற்றும் கட்டுமான பொருட்கள் கடை பேட்டை ரயில்வே கேட் அருகே முக்கூடல் சாலையில் உள்ளது. அந்த கடையில் கட்டில், ஜன்னல், நிலை, கதவு உள்ளிட்ட மர பொருட்கள், பிளாஸ்டிக் பைப்புகள், இரும்பு கம்பிகள், சிமென்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் ஏராளமாக வைக்கப்பட்டிருந்தன. அதே வளாகத்தில் மர அறுவை ஆலையும் நடத்தி வருகிறார்.

நேற்று (செப்.29) இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு மைதீன் பிச்சை வீட்டுக்கு சென்றுள்ளார். இரவு காவலாளி மட்டும் அங்கு இருந்துள்ளார். இந்நிலையில, இரவு சுமார் 10.30 மணியளவில் மரக்கடையில் இருந்து தீப்பிடித்து புகை வந்துள்ளது. சிறிது நேரத்தில் தீ வேகமாக பரவியது. இதைப் பார்த்த அந்த வழியாக சென்றவர்கள், பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பாளையங்கோட்டை, கங்கைகொண்டான், சேரன்மகாதேவி தீயணைப்பு நிலையங்களுக்கும் தீயணைப்பு துறையினர் தகவல் தெரிவித்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். 6 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் மரக்கட்டைகளில் தீப்பிடித்து வேகமாக பரவியது. இதனால் தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் தீயணைப்பு படையினர் திணறினர். பொக்லைன் இயந்திரங்கள் மூலம் பொருட்களை அப்புறப்படுத்தி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்துக்கு திருநெல்வேலி மாநகர துணை காவல் ஆணையாளர் கீதா, தென்காசி மாவட்ட தீயணைப்பு அதிகாரி பானுப்பிரியா, திருநெல்வேலி மாவட்ட உதவி தீயணைப்பு அதிகாரி வெட்டும்பெருமாள் உள்ளிட்டோரும் விரைந்து சென்றனர். மார் 15 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் இன்று மதியம் 2 மணியளவில் தீ அணைக்கப்பட்டது.

மரக்கடையில் குவித்து வைக்கப்பட்டிருந்த மரத்தூள்களில் மின் வயர் உரசி அதிலிருந்து தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானதாக கூறப்படுகிறது.

x