திமுக கூட்டணியில் இம்முறை காங்கிரஸுக்கு கூடுதல் தொகுதிகள்? - மாணிக்கம் தாகூர் பேட்டி


மாணிக்கம் தாகூர்

ஜி-20 மாநாட்டின் இலட்சினையாக பாஜக அரசு தங்கள் கட்சியின் தாமரை சின்னத்தை வைத்ததாக எதிர்க்கட்சிகள் பரபரத்தன. அந்த சலசலப்பு அடங்குவதற்குள், பாராளுமன்ற பணியாளர்களின் புதிய சீருடையிலும் தாமரை மலர்ந்திருக்கிறது. இது தொடர்பாக பாஜக அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்திருக்கும் காங்கிரஸ் எம்பி-யான மாணிக்கம் தாகூரிடம் பேசினோம். சூடு குறையாமலே பேசினார்.

புதிய சீருடை

பாராளுமன்றத்தின் பணியாற்றும் ஊழியர்களின் புதிய சீருடையில் தாமரை மலர்ந்திருப்பதாக சர்ச்சை கிளப்பி இருக்கிறீர்களே..?

அசுர பலத்தில் ஆட்சியில் அமர்ந்திருப்பதால் எதைப் பற்றியும் யாரிடமும் கலந்து பேசவோ, கருத்துப் பரிமாறவோ தேவை இல்லை என்ற மனநிலையில் உள்ளனர் மோடியும், அமித் ஷாவும். எதிர்கட்சிகள் மட்டுமல்ல... சொந்த கட்சிக்குள்ளேயே இருவரும் கலந்து பேசி முடிவுகளை எடுக்கிறார்களா என சந்தேகமாக இருக்கிறது. இ

அந்த எதேச்சதிகார போக்குத்தான் வரலாறுகளை மாற்றுவது தொடங்கி பாராளுமன்ற பணியாளர்களின் சீருடையை மாற்றுவது வரை நீண்டிருக்கிறது. பாராளுமன்றத்தில் பணியாற்றுபவர்களின் சீருடைகளில் தங்கள் கட்சி சின்னமான தாமரை சின்னத்தை பதித்திருப்பது கண்டனத்துக்குரியது. காரணம் கேட்டால், தேசிய மலர் தாமரை என்கிறார்கள். அப்படி எனில் தேசிய விலங்கான புலியையோ, தேசிய பறவையான மயிலையோ பதிக்காமல் விட்டது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

கட்சி சார்ந்த அரசியலை பாராளுமன்றத்திற்குள்ளும் புகுத்தத் துணிந்த ஒரே கட்சி பாஜக தான். அவர்களின் இத்தகைய அழுத்தத்திற்கு எல்லோருக்கும் பொதுவானவராக விளங்கக்கூடிய பாராளுமன்ற சபாநாயகர் ஆட்படக்கூடாது என்பதுதான் எங்களின் வேண்டுகோள்.


பாஜகவின் இது போன்ற செயல்களை இந்தியா கூட்டணி எப்படி எதிர்கொள்ளப் போகிறது?

பாஜகவின் மக்கள் விரோத ஆட்சியின் காலம் இன்னும் 200 நாட்கள் மட்டுமே. விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் பாதிப்பு, சிறு தொழில்கள் முடக்கம் என எல்லா வகையிலும் தோல்வியடைந்த இந்த ஆட்சியில் ஏழை - பணக்காரர் இடையிலான இடைவெளியும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நடுத்தர மக்கள்கூட ஏழ்மை நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றனர்.

அதானிகளுக்காக மட்டுமே நடைபெறும் இந்த ஆட்சியை விரட்டியடிக்க மக்கள் தயாராகிவிட்டனர். அதற்கு ஏற்றவாறு மக்கள் பிரச்சினைகளை மட்டுமே இந்தியா கூட்டணி பேச வேண்டும். கூட்டணியில் இருப்பவர்கள் தேவையற்ற விஷயங்களை பேசுவதன் மூலம் அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துவிடக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

புதிய பாராளுமன்றம்

கேரளம், மேற்கு வங்கம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் இந்தியா கூட்டணியில் இருக்கும் திரிணமூல், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் காங்கிரஸ் முறுக்கிக் கொண்டு நிற்கிறதே... இது இந்தியா கூட்டணியின் ஒற்றுமையைப் பாதிக்காதா?

ஒன்பதரை ஆண்டு மக்கள் விரோத கொடுங்கோல் பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ளது இந்தியா கூட்டணி. அதன் ஒருங்கிணைப்புக் குழு கூடி மாநிலங்களில் கூட்டணி கட்சிகளிடையே நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்.

முன் மாதிரியாக தமிழ்நாட்டில் காங்கிரஸும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஒரே கூட்டணியில்தான் உள்ளது. அது போன்ற மாநில அளவிலான ஒரு உடன்பாட்டுடன் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறோம். அமலாக்கத்துறை, வருமானவரித்துறை போன்ற அமைப்புகளை எதிர்க்கட்சிகள் மீது ஏவும் இந்த ஆட்சியை நீடிக்கவிடக்கூடாது. எல்லா எதிர்க்கட்சிகளும் அதற்கான தியாகத்தைச் செய்யத் தயாராவதன் மூலம் சுமூக தீர்வை நிச்சயம் எட்டுவோம்.

மாணிக்கம் தாகூர்

அண்ணாமலையின் பாதயாத்திரை பாஜகவின் பலத்தை அதிகரித்துள்ளதா?

தமிழகத்தை பொறுத்தமட்டில் பாஜகவையோ, பிரதமர் மோடியையோ மக்கள் எப்போதும் ஏற்றுக்கொண்டதில்லை. எல்லாவற்றிலும் இந்தி மொழியை திணிக்கும் பிரதமர் மோடியின் கொடியை கையில் பிடித்துக்கொண்டு யாத்திரை என்ற பெயரில் தினமும் 3 , 4 கி.மீ தூரம் நடக்கிறார் அண்ணாமலை.

இதற்காக தினமும் கோடிக் கணக்கில் செலவுசெய்கிறார். பாதயாத்திரை என்ற பெயரில் அதன் பெயரையே கொச்சைபடுத்தும் விதமாக நடக்கும் அண்ணாமலையின் நடைபயணத்தை தமிழக மக்கள் புரிந்துகொண்டுள்ளார்கள் ஆகவே, அவரது நடை பயணம் அவரது சுய விளம்பரத்திற்கு மட்டுமே உதவும்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு இந்த முறை கூடுதல் இடங்கள் கேட்கப்படுமா?

தமிழகத்தில் தொகுதி பங்கீடு குறித்து பேச இரண்டு கட்சிகள் தரப்பிலும் குழுக்கள் அமைக்கப்பட்டு சுமூகமான தீர்வு எட்டப்படும். சிலர் எதிர்பார்ப்பது போல் எங்கள் கூட்டணிக்குள் எந்த பிரச்சினையும் எழ வாய்ப்பில்லை. அப்படி பிரச்சினை எழும் என நினைப்பவர்களின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது.

மாணிக்கம் தாகூர்

மீண்டும் விருதுநகரில் போட்டியிடுவீர்களா?

வாய்ப்புக்கொடுத்தால் மீண்டும் போட்டியிடுவேன். என்றாலும் கட்சித் தலைமைதான் அதை முடிவு செய்யவேண்டும்.

x