உலக இதய தினம்: கும்பகோணத்தில் 1000 பேருக்கு சிறுதானிய உணவு வழங்கல்


கும்பகோணம்: உலக இதய தினத்தையொட்டி கும்பகோணம் அன்பு மருத்துவமனை சார்பில் 1000 பேருக்கு சிறுதானியங்கள் அடங்கிய பை, பனியன் வழங்கி, விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டன.

இந்தியாவில் ஆண்டுக்கு 7 லட்சம் பேர் மாரடைப்பால் உயிரிழக்கின்றனர். மேலும், ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர் பிற இருதய நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில் சரியான நேரத்தில் முறையான முதலுதவி சிகிச்சை அளிப்பதால் மாரடைப்பால் பாதிக்கப்படும் மொத்த நபர்களின் 10 சதவீதம் பேர் மட்டும் காப்பாற்றப்படுகின்றனர்.

இந்த இருத நோய் வராமல் தடுப்பதற்கு ஆரோக்கியமான உணவு முறைகள், உடல் பருமன், புகை மற்றும் மதுப் பழக்கம், மன அழுத்தம், ரத்த அழுத்தம், கொழுப்பு, சர்க்கரை, அளவான உறக்கம் மற்றும் மருத்துவப் பரிசோதனை ஆகியவைகளை கடைப்பிடித்தால் இந்த நோயிலிருந்து காப்பாற்றப்படலாம்.

இந்த நிலையில், உலக இருதய தினத்தையொட்டி கும்பகோணம் அன்பு மருத்துவமனை சார்பில் சிறுதானியங்கள் அடங்கிய பை மற்றும் பனியன் ஆகியவைகளை அதிகாலை 4 மணி முதல் மகாமக குளம், தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில், தாராசுரம் காய்கறி மார்க்கெட், காந்தி பார்க் மற்றும் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் குளக்கரைகளில் நடை பயிற்சி மேற்கொண்ட சுமார் 1000-க்கும் மேற்பட்டோருக்கு, மருத்துவமனை நிர்வாக இயக்குநர் உண்மை.கரிகாலன், மேலாளர் பிரசன்னா மற்றும் மருத்துவர்கள் வழங்கி, விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதன் மதிப்பு ரூ.1 லட்சமாகும்.

x